"தமிழகத்தில் உள்ள ஆட்சி துண்டாகிப்போய் இருக்கிறது. அவர்கள் மீண்டும் சேருவார்களா சேரமாட்டார்களா? புதிய ஆட்சிவருமா இல்லையா என்பது தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அடுத்ததேர்தல் வந்தால் பி.ஜே.பி தான் ஆட்சி அமைக்கும்," என கோவையில் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.

கடந்த 1998ம் ஆண்டு, பிப்ரவரி 14 ம்தேதி கோவையின் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆண்டுதோறும் குண்டு வெடிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 19ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்துமுன்னனி நிர்வாகிகள் காடேஸ்வரா சுப்பிரமணியன், கிஷோர்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அஞ்சலி கூட்டத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "பதவி சுகத்துக்காக, நாட்டைப் பற்றி சிந்திக்காமல் இன்று கூவத்தூரில் ஒருகூட்டம் கூடியிருக்கிறது. அதேநேரத்தில் சுய நலத்தை பற்றி சிந்திக்காமல், தியாகிகளை சிந்தித்து அஞ்சலிசெலுத்த கோயமுத்தூரில் கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்சி அதிகாரம் அந்தகூட்டத்திடம் இருக்க வேண்டுமா? இந்தகூட்டத்திடம் இருக்க வேண்டுமா? என்பதை வருங்காலம் தமிழகம் முடிவுசெய்யும் கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். 

எல்லோருக்கும் நம் மீது பயம்வந்திருக்கிறது. 'தமிழகத்தை காவி மயமாக்கப் போகிறார்கள்' என்று அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோரும் சொல்லிவருகிறார்கள். ஆவியைபார்த்து பயப்படுவதை போல காவியை பார்த்து பயப்படுகிறார்கள். அவர்கள் பயம் நியாயம். இன்று நாம் காலூன்றி இருக்கிறோம். இன்று எல்லோரும் நம்மை பார்த்துபயப்படவும், விமர்சனம் செய்யவும் காரணம். தமிழகத்தில் காவிப்படை பலம்பொருந்திய படையாக மாறிக்கொண்டிருப்பது தான். 

தற்போது தமிழகத்தில் உள்ள ஆட்சி துண்டாகிப்போய் இருக்கிறது. அவர்கள் மீண்டும் சேருவார்களா சேரமாட்டார்களா என்பது தெரியவில்லை. புதிய ஆட்சிவருமா இல்லையா என்பதும், புதிய முதல்வர் வருவாரா இல்லையா என்பதும் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அடுத்ததேர்தல் வந்தால் பி.ஜே.பி தான் ஆட்சி அமைக்கும். இந்து இயக்க சகோதரர்கள்தான் ஆட்சி அமைப்பார்கள்.  யார் என்ன சொன்னாலும் தமிழகத்தில் காவிக்கொடிபறக்கும். தமிழகம் காவிமயமாகும். இதை யாரும் தடுக்க முடியாது.

19 ஆண்டுகளாக குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தி வருகிறோம். நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என கோரிவருகிறோம். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அதைசெய்யவில்லை. அவர்கள் செய்யாவிட்டால் நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இந்த நினைவுத் தூணை நிறுவுவோம். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, பிரதமரை இழிவாக பேசினார்கள். சித்தரித்தார்கள். தமிழக மாணவர்கள் யாரும் மோடியை அவ்வளவுமோசமாக சித்தரிக்க மாட்டார்கள். அப்படி சித்தரித்தால் அவர்கள் சமூக விரோதிகளாகத்தான் இருக்க முடியும். 

உத்திரபிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது. தொலைக்காட்சியில் விமர்சனம்செய்பவர்கள், 'இஸ்லாமியர்கள் வாக்குகள் ஒட்டுமொத்தமாக இருக்கிறது. சிறுபான்மையினர் வாக்கு யாருக்குவிழுகிறதோ, அவர்கள் வெற்றி பெறுவார்கள்' என சொல்கிறார்கள். நாம் சிந்திக்கவேண்டும். தமிழகத்தில் வரும் தேர்தலில் இந்துக்களின் ஓட்டு ஒட்டுமொத்தமாக நமது இயக்கத்துக்குதான் வரும் எனும் போது இந்தவெற்றியை நாம் நிர்ணயிக்கும் சக்தியாக மாற முடியும்" இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Tags:

Leave a Reply