மத்திய அரசுசார்பில் நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலை மூலம் எக்ஸ்பிரஸ் பாதைகள் அமைக்கப் பட்டன. இவற்றில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்குவரும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஒப்பந்தக் காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுங்கவசூல் தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது, அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பயணிகளுக்கு நவீன கழிவறைவசதி ஏற்படுத்த வேண்டும், மருத்துவ வசதி இருக்கவேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், ஒப்பந்தப்படி இந்தவசதிகளை ஒப்பந்ததாரர்கள் செய்துகொடுக்கவில்லை.

இதையடுத்து மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி அனைத்து மாநில தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.


அதில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் உடனடியாக நவீனகழிவறைகளை அமைக்க வேண்டும், அதில் ஆண்கள், பெண்கள் என விசே‌ஷவசதி செய்து உரிய அறிவிப்புகளும் இடம்பெற செய்ய வேண்டும், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் மத்திய அரசின் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இந்த பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். 15 நாட்களுக்குள் கட்டுமான பணிகளை ஆரம்பிக்கவேண்டும் என்று நிதின் கட்காரி உத்தரவிட்டு இருக்கிறார்.

நாடுமுழுவதும் 370 சுங்கச்சாவடிகள் உள்ளன. அனைத்திலும் இந்தவசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இதுமட்டுமல்ல, ஒவ்வொரு 50 அல்லது 60 கி.மீட்டர் இடைவெளியிலும் நவீனவசதிகளுடன் ஓட்டல், பெட்ரோல் நிலையம், கழிவறைவசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது.

Leave a Reply