அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களும் 3 ஆண்டுகளில் முடிக்கபடும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி உறுதியளித்துள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவர், “சாலைப் பணிகள் நிமித்தமாக நான் கடந்த ஆட்சியின் போதே நிறைய செய்திருக்கிறேன். இந்த முறையும் அவை தொடரும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் சாலை யோரங்களில் 125 கோடி மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டிரு க்கிறோம். தேசத்தின் மக்கள் தொகைக்கு சமமான அளவு மரங்களை நடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். இப்போது நாளொன்றுக்கு 32 கி.மீ. சாலை அமைத்தல் என்ற இலக்கு இனிநாளொன்றுக்கு 40 கி.மீ அமைக்கப்படும் என்று உயர்த்தப்படுகிறது” என்றார்.

நிதின்கட்கரிக்கு கூடுதலாக சிறு, குறு, நடுத்தர தொழில்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அது குறித்து பேசிய அவர், “சிறு, குறு, நடுத்தர தொழில்துறைகள் வளர்ச்சி விகிதம், மற்றும் வேலை வாய்ப்புடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது.

அதனால், பிரதமர் இத்தொழிலின் வளர்ச்சி விகிதத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என விரும்புகிறார். பிரதமரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நான் செயல்படுவேன்” என்றார்.

நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிதின் கட்கரி, மே 30-ல் பதவியேற்ற பின்னர் இன்று முதன் முறையாக தொகுதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.