பிரதமர் நரேந்திரமோடி தனிநபர் ஆட்சி நடத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜாவடேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தில் அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து, ஆலோசித்தபிறகே முக்கிய முடிவுகளை மோடி அரசு எடுப்பதாக கூறியுள்ளார்.

மோடி சுயபுகழ் பாடுவதாகவும், அதிபர் ஆட்சி முறையை கடைப்பிடிப் பதாகவும் மத்திய முன்னாள் அமைச்சர் அருண்ஷோரி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் இந்தக்குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்:

அமைச்சரவைக் கூட்டங்களை நேரலையாக ஒளிபரப்பினால் எப்படியிருக்கும் என்று கூட நான் சில சமயம் யோசிப்பது உண்டு. ஏனெனில், அதைச் செய்தால் அமைச்சரவைக் கூட்டம் எந்தளவுக்கு ஜனநாயகமான முறையில் நடைபெறுகிறது என்பது மக்களுக்கு தெரியவரும்.

ஒவ்வொரு அமைச்சரும் தன்மனதில் தோன்றியதைப் பேசலாம். அவர்களது கருத்துகளை கூறலாம். அதில் பிரதமர் ஒருபோதும் குறுக்கிடமாட்டார். அனைவரின் கருத்துகளையும் அவர் கேட்டறிவார். அதன் பிறகுதான் அவரது கருத்தை வெளிப்படுத்துவார்.

ஜனநாயக முறையிலான கொள்கை உருவாக்க நடவடிக்கை களைத்தான் மோடி அரசு கையாளுகிறது. இங்கு அனைத்துமுக்கிய முடிவுகளுமே விவாதிக்கப் பட்டுத்தான் எடுக்கப்படுகின்றன.

பிரிவினைகிடையாது: மத்திய அரசுக்கோ அல்லது எங்கள் கட்சிக்கோ மக்களைப் பிளவு படுத்தும் நோக்கம் கிடையாது. ஒன்றுபட்ட இந்தியா தான் எங்கள் நோக்கம்.

ஒருதேசம், ஒரே மக்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். பிரதமர் மோடி மக்களை பாகுபடுத்திப் பார்த்ததுகிடையாது. 125 கோடி மக்களையும் அவர் ஒரேமாதிரியாகத் தான் பார்க்கிறார் என்றார் ஜாவடேகர்.

Leave a Reply