பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களின் ஏற்றமிகு நல்லாட்சியில், தொடர்ந்து பொருளாதாரக் குறியீடுகள் நம்பிக்கையூட்டுவதாகவும் உற்சாகமளிப்பதாகவும் இருந்து வருகின்றன. அவ்வகையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த இரண்டு வருடங்களில் அதிகபட்சமாக உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து ஏற்றம் கண்டுவருகிற
1) உற்பத்தி,
2) வேளாண்மை,
3) நுகர்வோர்
செலவினங்கள் ஆகியவற்றின் உறுதுணையால் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு மத்திய அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

மத்திய புள்ளியியல் அலுவலகம்( Central Statistics Office [CSO]) நேற்று (31-08-2018) வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போதைய நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதாரம் 8.2% ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் ஏற்பட்ட 7.7% மற்றும் முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட 5.6% என்ற வளர்ச்சியைக் காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும் 2016-ம் ஆண்டில் ஜனவரி-மார்ச் காலாண்டுக்குப் பிறகு நமது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 1.8% சரிவைச் சந்தித்தபோதிலும் இவ்வருடக் காலாண்டில் 13.5% வளர்ச்சியை எட்டியுள்ளது. அதே போல வேளாண்மைத் துறையிலும் கடந்த ஆண்டின் 3% வளர்ச்சியிலிருந்து தற்போதைய ஆண்டில் 5.3% ஆக உயர்ந்திருக்கிறது. வளர்ச்சியை முன்னிறுத்திய பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

"சர்வதேச அளவில் நிலவிவருகிற பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் இந்தியாவின் காலாண்டு வளர்ச்சி 8.2% ஆகியிருப்பது புதிய இந்தியாவின் ஆற்றலின் அளவுகோலாக இருக்கிறது. சீர்திருத்தங்கள் மற்றும் செறிந்த நிதி மேலாண்மை ஆகியவை நமக்கு உதவியிருக்கின்றன,” என்று மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி தனது ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தொடரும் சீர்திருத்தங்கள் மற்றும் சீரிய கொள்கைகளின் அமலாக்கம் ஆகியவற்றால் இந்த நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசகர் திரு.பிபேக் தேப்ராய் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணையின் விலை மற்றும் பிறநாடுகளில் உள்ள பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவற்றையும் தாண்டி இந்தியாவின் பொருளாதாரம் திறம்படச் செயலாற்றியுள்ளதாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேலை வாய்ப்புகளைப் பெருக்குகின்ற

1) கட்டுமானத்தொழில் மற்றும்
2) உற்பத்தித்துறை

ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இந்த வளர்ச்சிக்குப் பெருமளவு உதவியிருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.ராகுல் காந்தி உட்பட, எதிர்க்கட்சிகள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சரிவை, மத்திய அரசையும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சிப்பதற்கு ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி வருவதை அனைவரும் அறிவர். சர்வதேச நாடுகள் பலவற்றில் நிலவுகின்ற சூழல்கள் காரணமாக, அனைத்து நாடுகளின் பணமும் மிகக்கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றபோதும், இந்தியாவின் திறமையான நிதி நிர்வாகத்தினால், சிங்கப்பூர் டாலரும் இந்திய ரூபாயும் மட்டுமே டாலருக்கு நிகரான மதிப்பில் கடும்வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருந்து வருகின்றன என்பதையும் பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர்.

8% வளர்ச்சியினைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள, தற்போதைய நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து, மென்மேலும் பல மைல்கற்களைத் தாண்ட முடியும் என்ற நம்பிக்கையையும் நிபுணர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

’அனைவருக்கும் உறுதுணை; அனைவருக்கும் வளர்ச்சி’ என்ற நமது மாண்புமிகு பிரதமரின் தலைமையில், பாரதம் அனைத்துத் துறைகளிலும் மேலும் பல்வேறு சிகரங்களை எட்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நன்றி நயனார் நாகேந்திரன்

Leave a Reply

Your email address will not be published.