பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவுக்கு போய்சேர்ந்தார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்திசெல்லப்பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைபொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கல்பனா சாவ்லாவின் நினை விடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், நேற்றுமதியம், ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையிலான ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒப்பந்தம்குறித்து இருவரும் விவாதித்தனர். இணையதள பாதுகாப்பு பற்றியும் பேச்சுநடத்தினர்.

பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அமெரிக்காவுடன் தோளோடுதோள் நின்று பணியாற்றுவதில் பெருமைப்படுவதாக மோடி குறிப்பிட்டார். இருநாடுகளின் பொருளாதார உறவை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்வது எப்படி என்பது பற்றி விவாதித்ததாக கூறினார்.

அதற்கு ஒபாமா, இருநாடுகளும் ஆழமான, பரந்த நட்புறவை கொண்டிருப்பது இயல்பானது என்று கூறினார். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை கூடியவிரைவில் நடைமுறைப்படுத்துவது பற்றி மோடியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறினார். அணுசக்தி வழங்கும் குழுமத்தில் இந்தியாவை சேர்த்துக்கொள்வதற்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தார். அதற்கு மோடி நன்றி தெரிவித்து கொண்டார். இருநாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

சர்வதேசளவில், அணு ஆயுதப் பரவலை தடுப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு ‘என்.எஸ்.ஜி.’ என்று அழைக்கப் படுகிற அணு சக்தி வழங்கும் குழுமம் செயல்பட்டுவருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்தகுழுமத்தில் இந்தியா உறுப்பினராகசேர விரும்புகிறது. ஆனால் இதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பெஞ்சமின்ரோட்ஸ், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், அணு சக்தி வழங்கும் குழுமத்தில் இந்தியா இடம்பெற அமெரிக்காவின் உறுதியான ஆதரவை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்துகொண்டு நடைபோடுகிறோம். இந்தியா அணு சக்தி பாதுகாப்பு நாடு என்ற வகையில், அதனுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்து வதற்கு நிறைய நேரம் செலவிடுகிறோம் இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply