பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்கள் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இதில் யார் வெற்றி பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதையும் ஆக்கிரமித்துள்ளது.

ஆனால், இந்தத்தேர்தல் முடிவில் பெரிதும் கவனம் செலுத்த வேண்டிய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா , அந்தத்தேர்தல் முடிவுக்காகக் கூட காத்திருக்க நேரமின்றி அடுத்தநகர்வுக்கு தயாராகி விட்டார். ஆம், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு, கட்சியை இப்போதே தயார்செய்யும் பணிகளை அவர் துவக்கவுள்ளார். அதற்கான தேதியும் குறித்தாகி விட்டது.

டெல்லியில், வரும் 13ம் தேதி பாஜக.வின் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இரண்டு நாள்கள் கழித்து நடைபெறவுள்ள இந்தக்கூட்டத்தில், அந்தத்தேர்தல் முடிவு குறித்து பெரிய அளவில் ஆலோசனை இருக்கப் போவதாகத் தெரியவில்லை. மாறாக, நாடாளுமன்றத் தேர்தல் குறித்தே விவாதிக்கப்படும் எனத்தெரிகிறது. அமித் ஷாவின் செயல் திட்டமும் இதை உறுதிப் படுத்துவதாக உள்ளது.

அதாவது, பா.ஜ.க.வின் தேசிய அளவிலான நிர்வாகிகள், மாநிலங்களுக்கான மேலிட பொறுப்பாளர்கள், கட்சியின் மாநிலத் தலைவர்கள் உள்ளிட்டோரை அன்றைய கூட்டத்துக்கு அழைத் திருக்கிறார் அமித் ஷா. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே இவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருந்த பணிகள் குறித்து அறிக்கைகள் தாக்கல் செய்யப் படவுள்ளன. குறிப்பாக, தேர்தலில் வாக்குச் சாவடி வாரியாக வெற்றிபெற வேண்டும் என்பதை பாஜக. இலக்காகக் கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தேர்தல் பணியாற்ற கூடிய 10 இளைஞர்களின் பெயர்பட்டியல் தயார் செய்யப்பட்டு அமித் ஷாவிடம் சமர்ப்பிக்கப் படவுள்ளது.

இவ்வாறு கட்சி நிர்வாகிகளை தேர்தலுக்கு தயார் படுத்தும் அதே வேளையில், இளைஞரணி மீதும் அமித்ஷா கவனம் செலுத்தவுள்ளார். இதற்காக, 15ம் தேதி முதல் இரண்டு நாள்களுக்கு டெல்லியில் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட வாரியான இளைஞரணி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வுள்ளனர். அவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை அமித்ஷா வழங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பா.ஜ.க.வுக்கு எதிராக தேசியளவில் வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியாக எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து வருகின்றன. அதை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை பலப்படுத்து வதற்கான அனைத்து வித நடவடிக்கைகளையும் அமித் ஷா மேற்கொண்டு வருவதாக கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர். 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றிகிடைக்குமா அல்லது தோல்வி ஏற்படுமா? என்பது கூட தெரியாத நிலையில், எது குறித்தும் அலட்டிக் கொள்ளாமல் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அமித் ஷாவின் துணிச்சல் நிச்சயம் பாராட்டுக்குரியது என்பதில் மாற்றமில்லை.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.