அயோத்தி இட விவகார வழக்கை விரைந்துவிசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர்மசூதி, ராமர் கோவில் பிரச்சினை தொடர்பான வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டு பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகள் சமமாக பகிர்ந்து கொள்ளும்படி தீர்ப்பு அளித்தது. அதாவது அந்தநிலத்தை சன்னி வக்புவாரியம், நிர்மோஹி அஹாரா மற்றும் ராம் லல்லா என்ற அமைப்புகள் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுஇருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்தமனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த அமர்வு நேற்று முன்தினம் அயோத்தி வழக்கை விசாரிப்பதாக இருந்தது. ஆனால் இந்தஅமர்வில் உள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வரமுடியாத காரணத்தால் இந்த விசாரணை ரத்து செய்யப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:உ.பி., மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரியபகுதியில், 1993ல், நிலம் கையகப்படுத்தும் சிறப்பு சட்டத்தின் மூலம், 67.703 ஏக்கர்நிலம் கையகப்படுத்தப்பட்டது.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் முக்கியவழக்கில், 2.77 ஏக்கர் நிலம், சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இதில், மசூதி அமைந்திருந்த, 0.313 ஏக்கர் நிலம் தொடர்பாகவே பிரச்னைஉள்ளது.

ஆனாலும், கையகப்படுத்தப்பட்ட, 67.703 நிலம், 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்படுத்தப்பட வில்லை. இந்த நிலையில், ‘எங்களிடம் கையகப்படுத்தப்பட்ட, 42 ஏக்கர் நிலத்தை திருப்பி அளிக்க வேண்டும்’ என, ராம்ஜனம் பூமி நியாஸ் அமைப்பு கோரியுள்ளது.

இந்த, 67 ஏக்கர் நிலம், தற்போதைக்கு தேவையில்லை; அதுமத்திய அரசிடம் உபரியாக உள்ளது. அதனால், அதை, அதன் உரிமையாளர்களிடேமே ஒப்படைப்பதுதான் முறையாக இருக்கும்.இஸ்மாயில் பரூக்கி என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘மத்திய அரசு கையகப்படுத்திய, 67.703 ஏக்கர் நிலத்தில் எந்தப்பணியும் மேற்கொள்ளக் கூடாது; அது மத்திய அரசிடமே இருக்கவேண்டும்’ என, 2003ல் உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவில் திருத்தம்செய்து, கையகப்படுத்திய நிலத்தை, அதன் உரிமையாளர்களுக்கு திருப்பி ஒப்படைக்க அனுமதி அளிக்கவேண்டும். இதே, இஸ்மாயில் பரூக்கி வழக்கில், ‘எதிர்காலத்தில், நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்க நினைத்தால், மத்தியஅரசு அதை மேற்கொள்ளலாம்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தநிலத்தை திரும்ப ஒப்படைக்க அனுமதி அளிக்கவேண்டும்.

தற்போது, முக்கிய வழக்கில், 0.313 ஏக்கர் தொடர்பாகவே பிரச்னை உள்ளது. அந்த இடத்துக்கு செல்வதற்கான பாதை அமைக்கத்தேவையான நிலத்தைத்தவிர, மற்றநிலத்தை, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அனுமதி அளிக்கவேண்டும். இதனால், முக்கிய வழக்கில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில் கோவில் கட்டுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ‘ராம் ஜனம் பூமி நியாஸ்’ என்ற அமைப்பை, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைத்தது. கையகப் படுத்தப்பட்ட மொத்த நிலமான, 67 ஏக்கரில், இந்த அமைப்பிடம் மட்டும், 42 ஏக்கர் உள்ளது. மீதமுள்ள இடம், பல்வேறு அமைப்புகளுக்கு உரியவை; இவற்றில் பெரும்பாலான நிலம், ஹிந்து அமைப்புகளுக்கு சொந்தமானவை. இந்நிலையில், ‘எங்களிடமிருந்த கையகப் படுத்தப்பட்ட நிலத்தை திரும்பத் தரவேண்டும்’ என, ராம் ஜனம் பூமி நியாஸ் கோரி வந்தது. இதையடுத்து, நிலத்தை திருப்பி ஒப்படைக்க அனுமதி கோரி, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. ”ராம் ஜனம் பூமி நியாஸ் அமைப்புக்கு உரிமையான நிலத்தில், எந்தசர்ச்சையும் இல்லை. அதனால், அதை ஒப்படைக்கும் வகையில், எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்,” என, விஎச்பி., சர்வதேச செயல்தலைவர், அலோக் குமார் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *