வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆசைப்பட்டபடியே தற்போது அயோத்திவழக்கில் மத்தியஸம் பேச குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தகுழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி பிரச்சனை தீரவில்லை என்றால், இந்தியா இன்னொரு சிரியாவாக மாறிவிடும் என்று வாழும்கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சிலநாட்களுக்கு முன் குறிப்பிட்டார். அயோத்தி பிரச்சனையில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும் என்று கூறிவந்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். கடைசியில் அவரே இந்த பேச்சுவார்த்தை குழுவில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அயோத்தி தொடர்பான மத்தியஸ்தர்குழுவில் முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை இஸ்லாமியர்கள் விட்டுத்தர வேண்டும். இஸ்லாமிய முறைப்படி பிரச்சனை உள்ள இடத்தில் வழிபாடு நடத்தகூடாது. அதனால் அந்த நிலத்தை மொத்தமாக விட்டுத்தர வேண்டும் என்பதே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இந்த பிரச்சனையில் எடுத்து இருக்கும் நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரச்சனையில் இந்துக்களுக்கு எதிரான முடிவை எடுக்ககூடாது. இங்கு இந்துக்கள் அதிகம்பேர் வசிக்கிறார்கள். எதிராக முடிவு எடுத்தால் அது கலவரத்தில் முடியும். இந்துக்களுக்கு ஆதரவான முடிவு மட்டுமே பிரச்னையை சுமூகமாக தீர்க்க உதவும். அதைத்தான் முதலில் செய்யவேண்டும் என்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இஸ்லாமியர்கள் அந்த இடத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் மசூதிகட்ட வேண்டும். அதற்கு இந்துக்களும் உதவ வேண்டும். அப்போதுதான் அவர்கள் தோல்வி அடைந்ததாக கருதமாட்டார்கள். அப்போதுதான் இரண்டு பேருக்கும் வெற்றி கிடைக்கும். இவர்களுக்கு இடையில் சமாதானம் பிறக்கும் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply