கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர்வேட்பாளராக அறிவித்து பாரதிய ஜனதா தேர்தலை சந்தித்தது. அப்போது பல்வேறு வித்தியாசமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. 4 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் இந்தவாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால் தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருப்பதாக பா.ஜனதா கூறி வருகிறது . இன்னும் ஒருஆண்டில் பாராளுமன்ற தேர்தல்வர இருக்கிறது.

இப்போதைய ஆட்சியில் என்ன சாதனைகளை நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை மக்களிடம் கொண்டுசென்றால் தான் தேர்தலை சந்திக்கமுடியும்.

எனவே 4 ஆண்டு ஆட்சியில் செய்துள்ள சாதனைகள் பட்டியலை வெளியிட பிரதமர்மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக அனைத்து துறைகளிலும் 4 ஆண்டுகளில் நிறைவேற்றப் பட்டுள்ள திட்டங்கள் குறித்த பட்டியலை அனுப்பவேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

மத்திய தகவல் விளம்பரத்துறை செயலாளர் என்.கே. சின்ஹா இதற்கான கடிதத்தை அனைத்து அமைச்சரவைக்கும் எழுதியுள்ளார். அதில், தங்கள்துறைகளில் 4 ஆண்டுகளில் செய்தசாதனை பணிகள் குறித்த விவரங்களை முழுமையாக தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி மோடி பிரதமராக பதவி ஏற்றார். அந்த ஆண்டு தினத்தில் சாதனை பட்டியல் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதில் நாட்டில் ஏற்படுத்தப் பட்டுள்ள பொருளாதார மாற்றம், பொருளாதார வளர்ச்சி, கருப்புபணம் ஒழிப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டம், கங்கை சுத்தப்படுத்தும் திட்டம், வேலை வாய்ப்பு உருவாக்கியது, அன்னிய முதலீடு அதிகரிப்பு, நாட்டின் நிதி நிலை முன்னேற்றம், வங்கிகளில் செயல்படாமல் இருந்த சொத்துக்களை செயல்படவைத்தல் உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படும் வகையில் இந்தபட்டியலில் விரிவான அம்சங்கள் விளக்கப்பட்டிருக்கும். இதை புத்தகமாகதயாரித்து அனைத்து பகுதி மக்களுக்கும் சென்றடையும் வகையில் வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர். பத்திரிகைகளில் விரிவாக விளம்பரப் படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Tags:

Leave a Reply