1974 மே 18ல் பொக்ரானில் அணு குண்டு சோதனையை நிகழ்த்தியது இந்திரா தலைமையிலான அரசு.  உலகமே இந்தியா போட்ட அணு குண்டு சத்தத்தினைக் கேட்டு திரும்பி பார்த்தாலும் நம்தேசம் அதனை ‘அமைதியான அணுக்கருவெடிப்பு’ என்றே பெயரிட்டு அழைத்தது. புத்த பூர்ணிமாவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு ‘சிரிக்கும் புத்தர்’ என்று பெயர் சூட்டினார்கள்.

அதன் பிறகு 1998ல் மீண்டும் ஒரு அணு குண்டு சோதனையை தேசம் சந்தித்தது. அதற்கு அட்சாரம் போட்டவர் அன்றய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.  அமெரிக்க கழுகு கண்களுக்கு வேடிக்கை காட்டிவிட்டு வாஜ்பாய் அதனை சாதித்துக் காட்டினார். அந்தச் சாதனை அமெரிக்காவிற்கு அவமானமாகபோனது. அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தன் சட்டையே கிழிந்ததைபோல அவமானம் அடைந்தார். அதன்விளைவாக அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதித்தது. அதனையொட்டி கனடா போன்றநாடுகளும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. இந்த அணுகுண்டு வெடித்த உடன் வாஜ்பாய் ஏழைப் பாழைகள் வரை போய் இதயத்தில் நிறைந்தார்.

வாஜ்பாய் பிரதமாராகி 2 மாதங்கள் கழித்து 1998 மே17 அன்று இந்தியாடுடே இதழுக்கு ஒருபேட்டி அளித்தார். அவரிடம் அணு குண்டு பற்றிதான் முதல் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், “தேர்தலில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறிதியின் அடிப்படையிலேயே இந்த சோதனைகளை நிகழ்த்தினோம். இது தேசிய செயல்திட்டத்தில் ஒரு பகுதி. தேசிய பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தான் சோதனைகளை செய்ய முடிவெடுத்தோம்” என்றார். மேலும் “இப்போது இந்தியா ஒரு அணுஅயுதபாணி நாடு” என்றார். “இந்தியா அணு ஆயுதபாணியாக வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். எங்கள் பாஜகவும் முந்தையை பாரதீய ஜனசங்கமும் இதற்காக நெடுங்காலமாக வாதாடி வந்திருக்கின்றன” என்றார்.

பொருளாதாரத் தடைகள் பற்றிய கேள்விக்கு, “தடைகளால் நமக்கு ஒருகேடும் இல்லை. வராது. இந்த மாதிரியான அச்சுறுத்தல்களுக்கும், தண்டனைகளுக்கும் இந்தியா அடி பணியாது” என்றார். உங்களின் அரசியல் ஆதாயத்திற்காக இந்த நடவடிக்கையா என்றதற்கும் அவரிடம் வெளிப்படையான பதில் இருந்தது. “அரசியலை விட தேசத்தை முக்கியமாக நாம் கருதுவதே இந்திய ஜனநாயகத்தின் பெரியபலம். 1974ல் இந்திரா காந்தி முதன்முதலாக அணு ஆயுதசோதனை செய்த சமயத்தில், நாங்கள் எதிர் கட்சியாக இருந்தோம். ஆனால் அவருக்கு ஆதரவு தந்தோம்” என்றார்.

அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்தபோது, அவரை ஒருபுதிய பிரதமராகதான் தேச மக்கள் பார்த்தார்கள். ஆனால் அவரின் ஆட்சியின் மூலம், அவர் புதியஇந்தியாவின் பிரதமராக தெரியதொடங்கினார். அவர் இன்று இல்லை. அவரது கவிதைவரிகள் உயிர்ப்போடு உள்ளன. அதன் வழியே இந்தத் தேசம் அவரை வாசித்துக் கொண்டே இருக்கும். அவர் பாடி இந்த கவிதையில் பனித்துளியை என்றும் காணமுடியாது என்கிறது.  இனி நாம் பனித்துளியைக் காணலாம். வாஜ்பாய்யைதான் காண முடியாது. 

“சூரியன் மீண்டும் எழுவான்
வெய்யிலோ மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில் 
பனித்துளிகள்,
எல்லாப்பருவங்களிலும் 
காண இயலாது.”

Leave a Reply

Your email address will not be published.