'அண்ணா பல்கலை துணைவேந்தர், வெளிப்படைத் தன்மையோடு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில், அரசியல் மற்றும் தேவையற்ற துாற்றுதலை தவிர்க்கவேண்டும்' என, கவர்னர் சார்பில், வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றபோது, அண்ணா பல்கலை உட்பட, ஆறுபல்கலைகளில், துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்தது. அதில், ஐந்து பல்கலைகளுக்கு, துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை துணை வேந்தரை நியமிக்க, தேடுதல்குழுவிற்கான, அரசு உறுப்பினர் பெயர், இதுவரை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையிடமிருந்து பெறப்படவில்லை. மற்ற ஐந்து பல்கலைகளிலும், துணை வேந்தர்கள், விதிமுறைகளை பின்பற்றி நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு வரப்பெற்ற விண்ணப்பங்களை, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி, சிர்புர்கர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சுந்தரதேவன், ஐ.ஐ.டி.,பேராசிரியர், ஞானமூர்த்தி ஆகியோர் இடம் பெற்ற, தேடுதல் குழு பரிசீலித்தது. இறுதியாக, ஒன்பதுபேரை, கலந்துரையாடலுக்கு அழைத்தது.மார்ச், 31ல் நடந்த, கலந்துரையாடல் அடிப்படையில், மூன்றுபேர் பட்டியலை, அன்றைய தினமே, பல்கலை வேந்தரான கவர்னரிடம், தேடுதல் குழு வழங்கியது. மூன்றுபேரும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள். அப்பட்டியலில் இடம் பெற்றிருந்த, தேவராஜ், பொன்னுசாமி, சூரப்பா ஆகியோர் தகுதிகளை, கவர்னர் பரிசீலித்தார்.

மூன்று பேருக்கும், நேர்முகத் தேர்வு நடத்தினார். சூரப்பா, உலோகவியல் பொறியியலில், முனைவர்பட்டம் பெற்றவர். ரோபார் ஐ.ஐ.டி., நிறுவனத்தில், ஆறுஆண்டுகள் இயக்குனராக பணியாற்றி, நிர்வாக அனுபவம் பெற்றவர்.பொன்னுசாமி, கணிதவியலில், முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியபுள்ளியியல் கழகத்தின், சென்னை பிரிவில் தலைவராக பணியாற்றியவர். தேவராஜ், உயிர் வேதியியலில், முனைவர்பட்டம் பெற்று, பல்கலை மானிய குழு துணைத் தலைவராக பணியாற்றி உள்ளார்.துணைவேந்தர் தேர்வில், எவ்வித தலையீடுகளுக்கும், இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, நேர்முகத் தேர்வு முடிந்ததும், சூரப்பா, துணை வேந்தராக அறிவிக்கப்பட்டார்.

தேடுதல்குழு பரிந்துரைத்த, தகுதிவாய்ந்த மூன்றுபேரில் இருந்தே, அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வு, பல்கலை சட்ட விதிகளுக்குட்பட்டு, வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றுள்ளது.பல்கலைக்கான சிறந்த தலைமை, தொழில்நுட்ப கல்வி குறித்த புரிதல், பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லுாரிகளின் நலன், பல்கலை ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்காலநலன் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, துணை வேந்தர் தேர்வு நடந்தது. எனவே, இதில் அரசியல் மற்றும் தேவையற்ற துாற்றுதலை தவிர்க்கவும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

Tags:

Leave a Reply