அரசு பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான்கருவி பொருத்துவது கட்டாயமாக்கப் படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி அறிவிக்கை வெளியிட இருக்கிறது.
 ராஜஸ்தான் மாநில அரசு போக்கு வரத்து கழகத்தால் அவசர கால பொத்தான்கள், சிசிடிவி காமராக்கள் பொருத்தப்பட்ட புதிய 10 சொகுசுபேருந்துகள் மற்றும் 10 சாதாரண பேருந்துகள் விடப்பட்டன. இதை தில்லியில் புதன் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:


 தில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கும்பல் ஒன்றால் கடந்த 2012ஆம் ஆண்டு கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த துரதிருஷ்ட வசமான சம்பவத்தைத் தொடர்ந்து, பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகள் எடுக்கவேண்டியுள்ளது.
 ஆதலால் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அவசரகால எச்சரிக்கை பொத்தான் கருவி, சிசிடிவி காமரா, வாகனநடமாட்டத்தை கண்காணிக்கும் ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பொருத்துவதை கட்டாயமாக்குவதென்று மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.


 நாடுமுழுவதும் மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் மேற்கண்ட சாதனங்கள் அனைத்தையும் கட்டாயமாக பொருத்த வேண்டும் என்பது தொடர்பான அறிவிக் கையை மத்திய அரசு வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி வெளியிட இருக்கிறது. பேருந்தை கட்டமைக்கும் போதே அந்தக் கருவிகளையும் பொருத்த வேண்டும் என்று மத்திய அரசுவிரும்புகிறது. இந்த சாதனங்கள் அனைத்தையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் போது, அவற்றின் விலையும் குறையும்.


 அரசு பேருந்துகளில் பயணம்செய்யும் பெண்கள் தங்களுக்கு துன்பம் நேரிடும் பட்சத்தில், அந்தப் பேருந்துகளில் இருக்கும் அவசர கால எச்சரிக்கை பொத்தானை அவர்கள் அழுத்தவேண்டும். அப்போது, ஜிபிஎஸ் கருவியுடன் உதவியுடன் அந்தப் பேருந்து எந்தப் பகுதியில் செல்கிறது என்ற தகவல் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு செல்லும். எச்சரிக்கைபொத்தானை பெண்கள் அழுத்தியதும், பேருந்தில் நடைபெறும் காட்சியை சிசிடிவி காமரா பதிவு செய்து நேரலையாக அந்தக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதேவேளையில், பேருந்து தான் செல்லும் பாதையில் இருந்து விலகி வேறு பாதையில் சென்றாலும், அந்த தகவலும் காவல் துறைக்கு ஜிபிஎஸ் கருவி மூலம் தெரிந்து விடும்.

இதன் மூலம் காவல்துறையினர் விரைந்து வந்து, பொத்தானை அழுத்திய பெண்களின் குறைகளைக் கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.  இந்தநடவடிக்கைகள் அனைத்தும் அமலுக்கு வந்ததும், பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை அந்தக்கருவிகளே உறுதி செய்யும் என்றார் நிதின் கட்கரி.

Leave a Reply