மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது, அச்சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லிமுதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் 3 பேர் குற்றம்சாட்டினர். இதனால் அவர்கள் மீது டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அருண் ஜெட்லி அவதூறு வழக்குதொடர்ந்தார். ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தவழக்கில் கெஜ்ரிவால் உள்ளிட்ட 4 பேரும் நேற்று அருண் ஜெட்லியிடம் மன்னிப்புகேட்டனர். தனிநபர்கள் கொடுத்த தகவல்கள் தவறானவை என்று தெரிந்து கொண்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் மன்னிப்பு கடிதத்தில் கூறி இருந்தனர்.

அதை அருண்ஜெட்லியும் ஏற்றுக்கொண்டார். எனவே, இந்த வழக்கை முடித்து வைக்குமாறு அவரும், கெஜ்ரிவால் உள்ளிட்ட 4 பேரும் கோர்ட்டில் கூட்டுமனு தாக்கல் செய்தனர். அம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என்று மாஜிஸ்திரேட்டு சமர்விஷால் தெரிவித்தார். கெஜ்ரிவால் ஏற்கனவே மத்திய மந்திரி நிதின் கட்காரி, பஞ்சாப் மந்திரி மஜிதா ஆகியோரிடமும் மன்னிப்புகேட்டுள்ளார்.

ஆனால், அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ஆம் ஆத்மி அதிருப்தி தலைவர் குமார் விஸ்வாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply