முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளில், அசாமில் இந்தியாவின் மிகநீளமான ரயில் மற்றும் சாலைவசதிகள் கொண்ட போகிபீல் ஈரடுக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

அசாமின் தேமாஜி, அருணாச்சல் பிரதேசத்தின் திப்ருகர்க் பகுதிகளை இணைக்கும்வகையில், பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து 4.94 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்டது இப்பாலம். இது ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாலம் ஆகும். 21 ஆண்டுகளாக கட்டும்பணி நடந்தது.

1997-ல் முன்னாள் பிரதமர் தேவகவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு 2002-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் பணிகள் துவங்கி வைக்கப்பட்டது. கீழ்தளத்தில், ஒரே நேரத்தில் இரண்டு ரயில்களும், மேல் தளத்தில் 3 வழிச்சாலையும் இந்தப் பாலத்தில் பயணிக்கும்படி கட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 3-ம் தேதி பணிகள் நிறைவடைந்தன. இன்று (டிச 25-ம் தேதி) இப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த பாலத்தில் பயணம் செய்தார்.

இந்த பாலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டவுடன் வடகிழக்கு மாநிலங்களில் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் கிழக்குப்பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்க முடியும். வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதாரம் மேம்படும். சீனாவுக்கு அருகில் எல்லையை விரைவில் அடைய இந்தபாலம் பாதுகாப்பு படையினருக்கு பெரும் உதவியாக இருக்கும். காலநேர விரயம் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *