ஒருகாலத்தில் பரந்து விரிந்த இந்தியாவின் ஒருபகுதியாக விளங்கிய மியான்மரின் பழைய பெயர் பர்மா. 1989ல் மியான்மர் எனப் பெயர்மாற்றம் பெற்றது. ஏராளமான பாரம்பரிய புத்தக் கோயில்களைக் கொண்ட மியான்மர் ‘தங்க பகோடாக்களின் நாடு’ என்று அழைக்கப்படுகிறது.

ஆசிய நாடுகளுக்கு இடையிலான வணிகத்தை பெருக்க இந்தியா – மியான்மர் – தாய்லாந்து நாடுகளை இணைக்கும் புதியநெடுஞ்சாலை ஒன்றை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்சமயம் இம்பால் மற்றும் ஐஸால் ஆகிய இடங்களில் வேலைசெய்வோர் மணிப்பூர் மாநிலம் மோரே வழியாக 260 கி.மீ. பயணித்து மியான்மர் செல்ல 20 மணி நேரம் செலவிட வேண்டும்.

மோரே (மணிப்பூர்) நகரத்தி லிருந்து டாமு என்ற இடத்தில் எல்லையைக் கடந்து அங்கிருந்து 25 நிமிடத்திற்கு ஒரு முறை செல்லும் பேருந்துகளில் ஏறி காலி நகரியத்தை அடையலாம். அங்கிருந்து 200 கி.மீ. தொலைவுபயணித்து மியான்மரிலுள்ள மாண்டலே நகரை அடையலாம்.

இந்தவழியாக மியான்மர் செல்லும்போது எல்லையில் சுங்கசோதனைச் சாவடிகளில் லாரிகள் சரக்குகளை ஏற்றி இறக்குவதால் வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும். இதனால் பயணநேரம் சில நேரங்களில் நாட் கணக்கில் நீடிக்கும். இந்தப்பாதையில் இரண்டாம் உலகப் போரின்போது பயன் படுத்தப்பட்ட உடைந்த பாலங்களையும் நினைவுச் சின்னங்களையும் ஐராவதி ஆற்றையும் கடக்கவேண்டும்.

2002ம் ஆண்டு இந்தியா – மியான்மர் – தாய்லாந்து இடையே நெடுஞ்சாலை உருவாக்கும் திட்டம் உருவானது. பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு 2013ம் ஆண்டு மேமாதம் அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அன்றைய தாய்லாந்து பிரதமர் யிங்லுக் ஷினவத்ரா ஆகியோர் பாங்காக்கில் பேச்சுவார்த்தை நடத்தி 2016ம் ஆண்டிற்குள் இந்தநெடுஞ்சாலையை முடிக்க திட்டமிட்டனர்.

இந்தியாவின் மோரே (மணிப்பூர்) நகரிலிருந்து மியான்மரில் மண்டலே – ரங்கூன் வரை இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. ரங்கூனிலிருந்து தாய்லாந்தில் உள்ள மாயிஸாட்வரை உள்ள பகுதியின் வேலைகளை தாய்லாந்து அரசு மேற்கொள்ளும்.

241 கி.மீ. தொலைவுள்ள இந்தநெடுஞ்சாலை அமைக்க கிலோ மீட்டருக்கு 14 கோடி ரூபாய் செலவாகும். உள்நாட்டில் கவுகாத்தியையும் மோரேயையும் இணைக்கும் வேலைகளும் நடைபெறுகின்றன. இதனால் வடகிழக்கு மாநிலங்களின் சாலை இணைப்பு மேம்படும். சுற்றுலாவளரும்.

ஐராவதி ஆற்றின் உப நதிகளிலேயே பெரிய உபநதியான சிந்த்வின் நதியின் மேல் இரண்டாவது உலகப்போரில் பயன் படுத்தப்பட்ட 69 பாலங்களை புதுப்பித்துக் கட்டுவதும், மலைப்பாங்கான பழைய போர்க்கள பாதைகளில் சாலை அமைப்பதும் மிகவும் சவாலான பணியாகும்.

இந்தநெடுஞ்சாலை அமைப்பதன் மூலம் தற்சமயம் ஆண்டுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலராக நிலவுகின்ற இந்தியா – மியான்மர் வர்த்தகம் 45 பில்லியன் அமெரிக்க டாலராக உடனடியாக உயரும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த Egis India நிறுவனம் திட்ட அறிக்கையை தயார்செய்துள்ளது. இந்த வேலையை சர்வதேச ஏலம்மூலம் நான்கு ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலை இரண்டு, மூன்று வருடங்களில் அமைக்கப்பட்டுவிடும். நான்கு வழிப்பாதையாக அமைக்கப்படும் இதில் தண்ணீர், மின்சாரக் குழாய்களும் அமையும். மரங்கள் அடர்ந்தபகுதியில் பாதை அமைக்கப்படுவதால் ஒருமரம் வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக 50 மரம் நடுவதற்கு இந்தியா சம்மதித்துள்ளது.

சமீபத்தில் வியட்நாமிலிருந்து இந்தியாவந்த வர்த்தக பிரதிநிதிகள் இந்த நெடுஞ்சாலையை வியட்நாம் நாட்டோடு இணைக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப் படுத்தினர். இதன் மூலம் இது ஆசிய நாடுகளின் தேசிய நெடுஞ் சாலையாக மாறும்.

கடந்த நவம்பர் 12ல் மியான்மர் தலை நகர் நேபிடாவில் நடைபெற்ற இந்தியா – ஆசியான் மாநாட்டின் போது இத்திட்டம் குறித்து விரிவாக நமது பிரதமர் நரேந்திரமோடியால் பேசப்பட்டது.

தெற்காசிய நாடுகளிலும் கிழக்காசிய நாடுகளிலும் வலுவாக காலூன்ற சீனா முயன்றுவருகிறது. இந்தப்பகுதியில் சீனாவின் வர்த்தக விரிவாக்கத்தை இந்தநெடுஞ்சாலை கட்டுப்படுத்தி, இந்தியாவுக்கு புதிய வாய்ப்பு களை ஏற்படுத்தித் தரும்.

Leave a Reply