ஸ்ரீ ஆதி சங்கரரின் மகிமை, அவருக்கு முன்னிருந்த எழுபத்திரண்டு மதங்களில் எதுவுமே அவருக்குப் பின்பு பாரத் தேசத்தில் இல்லாமற் போனதுதான். அவர் கண்டனம் செய்த சாங்கியம், வைசேஷிகம் போன்ற சில மதங்களைப் பற்றிப் புஸ்தகங்களிலிருந்துதான் தெரிந்து கொள்ள முடிகிறது! இவற்றை நடைமுறையில் பின்பற்றுகிற எவரையுமே காணோம். காபாலிகம், வாமாசார சாக்தம் போன்ற கோரமதங்களைப் பற்றி பழைய இடிபாடு (ruins) புதைப் பொருள் இவற்றிலிருந்தே தெரிந்து கொள்கிறோம். வேத கர்மாநுஷ்டானத்தைச் சொல்லாமல் ஆத்ம குணங்களை மட்டும் சொல்லும் புத்தமதம் முதலிய சில மதங்களை மற்ற நாடுகளுக்காக விட்டு வைத்திருக்கிறார், ஸ்ரீ சங்கர பகவத்பாதர். அவையும் நம் நாட்டில் அவர் காலத்துகுப் பின் இல்லாமற் போயின. சொற்ப காலத்துக்குள், தத்வம் ஒன்றையே அடிப்படையாகக் வைத்து, மற்ற மதங்களை எல்லாம் ஜயித்து, அத்வைதத்தை ஆசாரியர்கள் நிலை நாட்டியதைப் போன்ற மகத்தான காரியதைச் செய்தவர் உலகில் எவருமே இல்லை.

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களுக்குப் பிற்பாடு, நம் நாட்டில் வேறு சம்பிரதாயங்கள் ஏற்பட்டாலும், ஸ்ரீ சங்கரர் ஸ்தாபித்த அத்வைத மதம் போய்விடவில்லை. இன்றும் அத்வைதிகள் இருக்கிறோம்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் வேதம் முழுமையையும் ஒப்புக்கொண்டார். வேதம் கூறும் சகல தெய்வங்களையும், வேதம் விதிக்கும் சகல கர்மாக்களையும் ஒப்புக்கொண்டார். அவற்றின் லக்ஷ்யமாக, வேத சிராஸன உபநிஷத்தின் முக்கிய தாத்பரியமான, 'ஜீவனும் பிரம்மமும் ஒன்றே' என்ற அத்வைதத்தை ஸ்தாபித்தார். ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரரும் 'ஜகத்குரு' என்ற விருதைப் பெற்றார்.

வைசாக சுக்கிலபக்ஷ பஞ்சமி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளின் அவதார தினம். அப்பொழுது நக்ஷத்திரம் சிவபெருமானுக்குறிய திருவாதிரையாகவோ, அல்லது ஸ்ரீ ராமனுக்குறிய புனர்வஸுவாகவோ அமையும்.

ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளைவிடப் பெரிய புண்ணியகாலம் என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு உங்களுக்கு இரண்டு காரணங்கள் தோன்றலாம். 'நம்முடையது' என்ற அபிமானத்தால் சொல்கிறேனோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீ சங்கர ஜயந்தியாதலால், அதைச் சற்று உயர்த்திப் பேசுகிறேனோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம் என்கிறேன்.

அது என்ன காரணம்? ஸ்ரீ சங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப்பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள்? வேத தர்மத்துக்கு ஆபத்து வந்த போது, அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்தால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிடில், இன்று ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களும் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளையெல்லாம் நிலைநாட்டிய ஜயந்தியாக இதுவே இருக்கிறது. ஆகையினால்தான் ஸ்ரீ சங்கர ஜயந்தியை மிக மிகப் புண்ணிய காலமாகச் சொல்கிறேன்.

தனி மனிதராக இருந்துகொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஒரு இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்த மகத்தான அநுக்கிரகத்தைச் செய்தார். 'திக்விஜயம்' என்றால் அவர் செய்ததுதான் 'திக்விஜயம்'.

ஸ்ரீ ஆச்சார்யாளுடைய திக்விஜய மகிமையைக் கேட்டதற்குப் பிரயோஜனமாக நாம் அனைவரும் நம் மனத்தில் உள்ள அசட்டுத்தனங்களைப் போக்கி, நமக்குள் நாமே திக்விஜயம் செய்யவேண்டும்.

'பஜகோவிந்த'த்தில் ஆரம்பித்துத் பரமாத்ம தத்துவத்தில் முடிவது ஸ்ரீ ஆச்யார்யாளின் உபதேசம். "ஒன்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கோவிந்த கோவிந்த என்று சொல்" என்று 'பஜகோவிந்த'த்தில் சொல்கிறார் ஆச்சார்யாள். "யமன் ஒரு க்ஷணம்கூட வீண் கழிப்பதில்லை. பிரதி க்ஷணமும் நெருங்கி வருகிறான். எப்போது பிடித்துக் கொள்வானோ தெரியாது. கோவிந்தன் காலைக் கட்டிக்கொண்டால்தான் யமனால் நமக்கு பயம் இல்லை' என்கிறார். எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிப் பழக வேண்டும். எப்படியும் போஜனம் செய்கிறோம். அதோடு, சாப்பிடுகையில் 'கோவிந்த கோவிந்த' என்று சொல்லிக் கொண்டே உண்டால், அந்த மனோபாவத்துடன் உள்ளே போகும் அன்னம், ஆத்ம தியானத்துக்கு அநுகூலம் செய்யும். அந்த அன்னஸாரம் உடம்பில் சேரச் சேர ஈஸ்வர ஸ்மரனம் அதிகமாகும். நாம் என்றைக்கும் போஜனத்தை நிறுத்தப் போவதில்லை. ஆகையினால் இந்தச் சின்ன அப்பியாசத்தால் கோவிந்த உச்சாரணம் என்றைக்கும் நடந்துவரும். கோவிந்த உச்சாரணத்துடன் சாப்பிடுகையில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நாமே நிறுத்துவோம். கண்ட வஸ்துக்களை கோவிந்த நாமத்துடன் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிகவும் அவசியம். பல இடங்களில் பலவிதமான வஸ்துக்களைத் தின்னுவதே இன்றைய மனக்கோளாறுகளுக்கும் ஒழுக்ககக் குறைவுக்கும் ஒரு முக்கியமன காரணம்.

ஆசார்யாள் மகிமை கேட்டதற்கு அடையாளமாக இப்படிச் சின்ன சின்ன விஷயங்களையாவது அநுஷ்டானத்தில் கொண்டு வர வேண்டும். எல்லோரும் காலையில் சிறிது விஷ்ணு ஸ்மரணம், மாலையில் சிறிது சிவஸ்மரணம் செய்ய வேண்டும். இரவில் தூங்கும் முன்பு அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும். அன்றைய தினம் ஆத்ம க்ஷேமமாகவோ, பரோபகாரமாக ஜீவகாருண்ய சேவையோ ஏதேனும் செய்தோமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். "அம்மா, இன்றுவரை நான் செய்த தப்புகளை மன்னித்து, நாளையிலிருந்து நான் தப்புகளைச் செய்யாமல் இருக்க ரக்ஷிப்பாய்" என்று காமாக்ஷியை மனமுருகி வேண்டிக்கொண்டு தூங்க வேண்டும்.

இன்று நம்மிடையே இப்படிப்பட்ட சிறிய, பெரிய அநுஷ்டானங்கள் பலவும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காவது வந்திருப்பதற்குக் காரணமான ஸ்ரீ ஆதி ஆசார்யாளை என்றைக்கும் மறக்கக்கூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல் ஸ்ரீ ஆசாரிய ஜயந்தியைக் கோலாஹலமாகக் கொண்டாட வேண்டும். ஆசாரிய பாதுகையை தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீ ஆசாரியாள் அநுக்கிரகத்தில் சகல மங்களங்களும் உண்டாகும்.

-தெய்வத்தின் குரல்

One response to “ஆதி சங்கர ஜெயந்தி”

Leave a Reply