தி ஹிந்து தமிழ் பத்திரிகையில் வெளிவந்தது, திருச்சியில் ஒருகூட்டம். அப்போது ஆர்எஸ்எஸ்ஸின் மாநில அமைப்பாளர் ராமகோபாலன். “நான் முழு நேர ஊழியன். உத்தியோகம், கல்யாணம் எதுவும் வேண்டாம் என்றுதான் அமைப்புக்கு என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன். ஆர்எஸ்எஸ் சேவைக்கு இப்படியானவர்கள் நிறையத்தேவை. சொந்த வாழ்க்கையை விட்டுவிட்டு அமைப்புக்காகப் பணியாற்ற இங்கு யாராவது தயாராக இருக்கிறீர்களா?” என்று அவர்கேட்ட மாத்திரத்தில் கை தூக்கிவிட்டார் கணேசன். சொன்னபடியே 1970 பிப்ரவரி 16-ல் அரசு வேலையை விட்டுவிட்டு, ஆர்எஸ்எஸ் முழு நேரப் பிரச்சாரகராகி விட்டார். திருமணமும் செய்து கொள்ளவில்லை. குடும்பத்தினரும் வற்புறுத்தவில்லை.

ஆர்எஸ்எஸ் டு பாஜக

முதலில் நாகர்கோவில் நகரப்பொறுப்பாளர். அடுத்து, நெல்லை, மதுரை மாவட்டப் பொறுப்பாளர். அடுத்து, ‘எம்ஆர்டிகே’ எனப்படும் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மண்டலப் பொறுப்பாளர். அடுத்து, குமரி முதல் திருச்சி வரையிலான அத்தனை மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர். அடுத்து மாநில இணை அமைப்பாளர். ஆர்.எஸ்.எஸ்.ஸில் இப்படிப் பயணித்த கணேசனை பாஜக பணி நோக்கி திருப்பியவர் ஹெச்.வி.சேஷாத்ரி. 1991-ல் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன் விரைவிலேயே மாநில அமைப்புச்செயலாளர் ஆனார். பாஜகவில் மாநிலத் தலைவருக்கு நிகரான அதிகாரம் கொண்ட முக்கியமான பதவி இது. ஆர்எஸ்எஸ்தான் அப்பதவியை நிரப்பும். அந்தப் பதவியிலிருந்தபடிதான் தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்தார் கணேசன்.

பத்திரிகை முகவரின் மகன்

தஞ்சாவூரில், 16.2.1945-ல் இலக்குமிராகவன் – அலமேலு தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர் இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை முகவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டதால், அண்ணன்களின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் கணேசன். அண்ணன்கள் எல்.சேஷன் – ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊழியர், இல.நாராயணன் – தொலைத்தொடர்புத் துறை ஊழியர், இல.கிருஷ்ணமூர்த்தி – தமிழக அரசு ஊழியர் மூவரும் ஆர்எஸ்எஸ் ஈடுபாட்டுடன் வளர்ந்தவர்கள். எனவே, ஐந்துவயதிலேயே ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார் கணேசன். 16 வயதிலேயே அரசு ஊழியராகிவிட்டார் என்றாலும், ஆர்எஸ்எஸ் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

மோடியும் கணேசனும்

குஜராத்தில் மோடியும், தமிழ்நாட்டில் கணேசனும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ்ஸில் அடுத்தடுத்த நிலை நோக்கி நகர்ந்தவர்கள். கணேசன் தமிழ்நாட்டில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தபோது, குஜராத்தில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார் மோடி. அடுத்து, இருவரும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆனார்கள். இருவரும் பலகூட்டங்களில் இணைந்து பணியாற்றி யிருக்கிறார்கள். மாநில அளவிலான பதவி நோக்கி நகர்கையில், பாஜகவுக்குள் கணேசனுக்கு முன்பே பொறுப்புக்குச் சென்று விட்டார் மோடி. பாஜக செயற்குழு உறுப்பினராக 28 ஆண்டுகளாக இருக்கும் கணேசன், இடையில் தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்தார்.

மறைவாய்ச் செய்த உதவி

ஆர்எஸ்எஸ் பணிகள் பெரும்பாலும் பொதுவெளியின் பார்வைக்குத் தெரிவதில்லை என்பதால், தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருந்துகொண்டு கணேசன் நடத்திய ஆரம்பகால அரசியல் பலருக்கும் தெரியாது. மதுரை மாநகராட்சித் தேர்தலில் திமுகவும், காங்கிரஸும் சம இடங்களில் வென்றிருந்தபோது, காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஜன சங்கம் சார்பில் வென்றவரைத் திமுகவுக்கு ஓட்டுப்போட வைத்து முத்துவை மேயராக்கியதில் கணேசனுக்குப் பங்குண்டு. இதேபோல, மேலவை தேர்தலில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை எதிர்த்து நின்ற கிறிஸ்தவ வேட்பாளரை வீழ்த்து வதற்காக குமரிமாவட்ட ஆர்எஸ்எஸ் அனுதாபிகளைப் பழனிவேல்ராஜனுக்கு வேலைசெய்ய வைத்த வரலாறும் கணேசனுக்கு உண்டு. வெற்றிக்குப் பின் ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்று நன்றி தெரிவித்து வந்தார் பழனிவேல்ராஜன்.

கொள்கை வேறு… நட்பு வேறு…

கொள்கையில் உறுதியாக இருந்தாலும், அமைப்புக்கு அப்பாற்பட்டு எல்லோருடனும் நட்போடு பழகுபவர் கணேசன். முக்கியமான உதாரணம், கருணாநிதியுடனான உறவு. காங்கிரஸ் கூட்டணி, முதல்வர் பதவி எதையும் பொருட்படுத்தாமல் கணேசனின் பிறந்த நாளுக்கு வீடு தேடி வந்து வாழ்த்திச் சென்றார் கருணாநிதி. “எல்லா வகையிலும் அவர் என்னை விட ரொம்பப் பெரியவர். வீல்சேரில் அமர்ந்தபடி என் வீட்டுக்கு வந்தார். அவருடைய பெருந் தன்மையே வேறு” என்பார் கணேசன். கம்யூனிஸ்ட் தலைவர்களான கே.டி.கே.தங்கமணி, நல்லகண்ணு, சங்கரய்யா மீதும் அளவுகடந்த மரியாதை வைத்திருப்பவர் கணேசன்.

தோற்றாலும் எம்.பி.

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராக்கி இவரை அழகு பார்த்தது பாஜக. மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் ஏனைய உறுப்பினர் களோடு நட்போடு உறவாடும் கணேசனைப் பலர் ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு.

காபி பிரியர்

ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. பரிமாறப்பட்ட உணவில் ஒரு துளியைக்கூட வீணாக்க மாட்டார்கள். கல்யாண விருந்தே என்றாலும் கூட கறிவேப்பிலையைக்கூடச் சாப்பிட்டுவிட்டுத்தான் எழுவார் கணேசன். நல்ல காபிகிடைக்கும் என்றால், எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் பயணப்படுவார்.

வார்த்தையில் வெறுப்பு ஏன்?

பொதுவாழ்க்கையில் இருந்தாலும், கணேசன் சிறைக்கும் போன தில்லை, நீதிமன்றப் படியேறியதுமில்லை. பலமுறை போராட்டங்களில் கைதானாலும், மாலையில் விடுவிக்கப்பட்டுவிடுவார். மிசா காலத்தில் போலீஸ் தேடிய போது, தலைமறைவில் இருந்தார். நெருக்கடிநிலையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியதோடு பாடல்களும் எழுதினார். அப்போதும்கூட தனிநபர் தாக்குதல், கண்ணியக் குறைவான பேச்சைத் தவிர்த்தார். “இந்திரா காந்தி ஒழிக” என்று கோஷமிட்டவர்களைத் தடுத்து, “இந்திரா காந்தியின் சர்வாதிகாரம் ஒழிக!” என்று கோஷமிடச் சொன்னார்.

வாசிப்பு முக்கியம்

அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடும் கணேசன், காலாற நடப்பார். பிறகு யோகா. அதன் பிறகு திருக்குறள், பாரதியார் கவிதைகள், பகவத்கீதையில் ஒரு அத்தியாயமாவது படிப்பார். அதன் பிறகு மூன்று தமிழ், இரண்டு ஆங்கிலப் பத்திரிகைகளை வாசிப்பார். “நாற்பது வருஷமா படிக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதுப் புது வாழ்வியல் செய்திகளைத் தந்துகொண்டே இருக்கு” என்று திருக்குறள் பற்றி சிலாகித்துப் பேசும் அவருக்கு, எழுத்தார்வமும் உண்டு. வெள்ளிவிழா காணும், பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் அவர். ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பையும் நடத்திவருகிறார். 1991-ல் சென்னை வந்தது முதல் தனது அண்ணன் இல.கோபாலன் வீட்டில்தான் வசிக்கிறார் கணேசன். அண்ணன் மகள் மருத்துவர் காயத்ரி திருமணம் நடந்தபோது, எல்லா கட்சியினரையும் அழைத்தார். கருணாநிதி, ஜெயலலிதா, முரளி மனோகர் ஜோஷி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் பங்கேற்ற அந்தவிழாவில், சிறுபான்மையினர் தலைவர்களான அப்துல் லத்தீப், அப்துல் சமது, டி.ஜி.எஸ்.தினகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நன்றி தி ஹிந்து

Leave a Reply