ஆர்கே.நகர் இடைத் தேர்தலின் முடிவு தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணியின் சார்பில் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், ஜெ.தீபா, தேமுதிக சார்பில் மதிவாணன், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, தண்டையார் பேட்டையில் பாஜக தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் நேற்று பணிமனையை பார்வையிட்ட பின்னர் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜகதலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் கங்கைஅமரன் மற்றும் மாநில நிர்வாகிகள், தேர்தல் பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முரளிதரராவ், தமிழகத்தில் நிலவும் அரசியல் மிகவும்மோசமாக உள்ளது.

இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதை கண்கூடாகவே காணமுடிகிறது. பணம்கொடுத்து ஓட்டுபெறும் பழைய நிலைமை மீண்டும் தலைதூக்கியுள்ளது. பணம்இருந்தால் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று அதிமுக-வினர் நினைக்கிறார்கள். பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் புகார்கள் தரப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அதிமுக-வுக்கு மாற்று திமுக என்றும், திமுக-வுக்கு மாற்று அதிமுக என்றும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையான மாற்று அது இல்லை. தற்போதுள்ள சூழ்நிலையில், ஒருபுதிய மாற்று அரசியல் தேவைப்படுகிறது. அந்தமாற்று அரசியலை பாஜக-வால்தான் கொடுக்கமுடியும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்றார்.
 

Leave a Reply