பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப்பிரிவில், 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில்,பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு தயாரித்துள்ளது.

இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசிநாளான நேற்று, அதிரடியாக, இந்த மசோதாவை, லோக்சபாவில் தாக்கல்செய்து, இரவு வரை நீண்ட விவாதம் நடத்தி, இறுதியாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவுக்காகவே, ராஜ்யசபாவை ஒருநாள் கூடுதலாக நடத்த திட்டமிட்டு, அதன்படி, நேற்று காலை சபைகூடியது. உடனே, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் இறங்கின.’அனைத்து கட்சிகளையும் ஆலோசிக்காமல், ஒரு நாள் காலநீட்டிப்பு செய்தது தவறு’ என, பல எம்.பி.,க்கள் குற்றம் சாட்டினர். மேலும், மசோதாவை அவசரகதியில் நிறைவேற்ற வேண்டாம் என்றும், பார்லிமென்ட் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறினர்.

அதை மறுத்த நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, ”இது குறித்து முடிவெடுக்க, ராஜ்ய சபா தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளது,” என்றார். இருப்பினும் அமளிதொடரவே, சபை ஒத்தி வைக்கப்பட்டது.

மதிய உணவுக்குபின் ராஜ்யசபா கூடியதும், சமூகநீதி துறை அமைச்சர், தாவர்சந்த் கெலாட், மசோதாவை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது, ”இந்த, 21ம் நுாற்றாண்டில், மற்றொரு அம்பேத்கர் பிறந்துள்ளார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றும் வல்லமை உடைய இந்தமுடிவை எடுத்த அவர், வேறுயாருமல்ல; நம் பிரதமர் நரேந்திர மோடி தான்; அவரை பாராட்டுகிறேன்,” என்றார்.

பா.ஜ., – எம்.பி., பிரபாத்ஜா பேசுகையில், ”ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என, எல்லா கட்சிகளுமே தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தன. பிற கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும், முதல் பிரதமர் நரேந்திர மோடி தான்,” என்றார்.

Leave a Reply