இடைத்தேர்தலில் பி.ஜே.பி.க்கு வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது.?

இடைத்தேர்தலை நாங்கள் துணிச்சலாக சந்திக்கிறோம். 89 உறுப்பினர்களை வைத்துள்ள திமுக, எதிர்கட்சிக்கான பணியை செய்யவில்லை. எங்கள் கட்சி உறுப்பினர் ஒருவர் சட்டமன்றம் சென்றால் பத்து உறுப்பினருக்கு சமம். எங்களுக்கு எம்.எல்.ஏ.ஆகும் தகுதி இல்லையா?. எந்த காரணத்தையும் சொல்லி தேர்தலை புறக்கணிக்க விரும்பவில்லை. தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டால் நாங்கள் வெற்றி பெறுவோம்.  ராஜஸ்தான், குஜராத் போல தமிழகத்தில் தனித்து ஆட்சியை பிடிக்கும் கட்சியாக பி.ஜே.பி. தமிழகத்தில் திகழும். இப்பவே தமிழகத்தில் ஆழமாகவும், அகலமாகவும் வேறூன்றி விட்டோம். மக்களுக்கான கட்சி பி.ஜே.பி. தான்.

இடைத் தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின் கூறுகிறாரே…?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின்  சொல்வதில் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் உள் நோக்கம் உள்ளது.  இதை எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று ஸ்டாலின் விளக்க வேண்டும்.

 

காவிரி மேலான்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோது அதற்கு எதிராக மனு தாக்கல் செய்த பி.ஜே.பி.அரசு, அதே நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை உத்தரவு போட்டபோது, அமைதியாக இருந்தது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறாரே?

அது வேறு, இது வேறு. காவிரி விவகாரத்தில் உடனே மேலான்மை வாரியம் அமைக்க முடியாது, சிறிது காலமாகும் என்றுதான் சொன்னார்கள். இதில் சுப்ரீம் கோர்ட் ஆர்டராக போடவில்லை, ஒரு நோடிபிகேஷன்தான் கொடுத்தார்கள்.  ஆனால், ஜல்லிக்கட்டு வழக்கில் ஆர்டர் போட்டார்கள், அதில் மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாத நிலை. இரண்டு விஷயமும் வேறு. இது புரியாமல் ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். சமீபகாலமாக ஸ்டாலின் பதற்றமாகவே பேசுகிறார்.

தமிழக அரசுக்கு பி.ஜே.பி. மறைமுகமாக உதவுவதாக குற்றம்சாட்டு உள்ளதை பற்றி?

அப்படியெல்லாம் இல்லை, அப்படீன்னா நாங்க ஏன் வேட்பாளரை நிறுத்தணும்.? மத்திய அரசு தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மதுரையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல சேர்த்திருக்காங்க, இதுபோல பல நல்ல விஷயங்கள செய்றாங்க. அதை வச்சு அதிமுக அரசை ஆதரிப்பதாக சொல்வது தவறு.
(இந்த பேட்டி முடிந்த சில மணி நேரத்தில் புதுவை, நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அம்மாநில பி.ஜே.பி. ஆதரவு தெரிவித்து அறிவிப்பு விட்டது.)

 

வேட்பு மனுத்தாக்கலுக்கான படிவத்தில் ஜெயலலிதா கைநாட்டு வைக்க அனுமதியளித்த தேர்தல் கமிஷனை , அதிக சலுகை அளிப்பதாக ராமதாஸ் விமர்சித்துள்ளாரே?

அவர் ஒரு டாக்டராக இருந்து கொண்டு இப்படி விமர்சிக்கக் கூடாது. முதல்வர் சுய நினைவோடு இருந்தாலும் அவரால் கையை தூக்க முடியவில்லை என்று டாக்டர்கள் உத்தரவாதம் அளித்துள்ள நிலையிலும், இதுபோன்ற சம்பவங்கள் முன்பு நடந்திருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ள நிலையிலும் அதை விமர்சிப்பது ஆரோக்கியமானது அல்ல.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பாவுக்கு பி.ஜே.பி. ஆதரவளிப்பதாக சொல்லப்படுகிறதே?

ஆதாரமற்ற புகாருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

தமிழிசை சவுந்திரராஜன் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டி

Tags:

Leave a Reply