த்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நிர்வாகத்திறமை குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்னொரு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதை ஆமோதித்துள்ளார். ‘அ.தி.மு.க., பி.ஜே.பி இடையே என்னதான் நடந்தது?’ என்ற கேள்வியுடன் பி.ஜே.பி-யின் தமிழக மேலிடப் பார்வையாளர் முரளிதர் ராவிடம் பேசினோம்.

“மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக திட்டங்கள் குறித்துப்பேச நேரம் ஒதுக்கவில்லை. அவரைச் சந்திக்க முடிவதில்லை. இதனால் தமிழகத்துக்கான திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன’ என்று பேசியுள்ளாரே?’’

“இது மக்களுக்கான அரசா என்ற கேள்வி எல்லோரிடத்திலும் உள்ளது. குறிப்பாக அசாதாரண நாட்களில் இந்த அரசு எவ்வாறு செயல்பட்டுள்ளது? சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது இந்த அரசு எவ்வாறு செயல்பட்டது? இந்த அரசால், தமிழக மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் ஏராளம். முதலமைச்சர் ஜெயலலிதாவை எளிதில் அணுக முடியவில்லை என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் கூறுகிறார்கள். அரசின் நிர்வாகம் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. அ.தி.மு.க-வில் உள்ள தலைவர்கள் அனைவருமே தலைமறைவாக இருந்து ஆட்சி செய்து வருகின்றனர். பொதுமக்களின் தேவை என்ன என்பது குறித்து ஆட்சியாளர்கள் கேட்பது இல்லை என்பதை தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளார்கள்.”

“அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு போன்றோர்களைச் சந்திக்கும் முதலமைச்சர், ஏன் மற்ற அமைச்சர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை? இதில், அரசியல் உள்நோக்கம் உள்ளதா?” 

“பிரதமர், நிதி அமைச்சர் போன்ற​வர்களை  ஜெய​லலிதா சந்தித்துதான் ஆக வேண்டும். அவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நான் மத்திய அரசின் அமைச்சரவையில் இருந்து பேசவில்லை. நான் அரசியல் தலைவராகப் பேசிக்கொண்டிருக்​கிறேன். மீனவர்கள், விவசாயிகள், பெண்கள் உள்ளிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் எவரும் முதலமைச்சரைச் சந்திக்க முடியவில்லை. மக்களுக்கு, அடிமட்டத்தில் இருந்து தொண்டாற்றும் தலைவரே தேவை. ஜனநாயகத்துக்குத் தற்போதைய தேவை என்ன? நாம் ஒன்றும் ஏகாதிபத்திய வாழ்வியல் முறையில் இல்லை.”

“ஐந்து ஆண்டு காலம் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களில் இந்தப் புகாரை எழுப்பாத நீங்கள், இப்போது தேர்தலை முன்வைத்து இந்தப் புகாரை எழுப்புவதாகக் கூறப்படுகிறதே?”

“தமிழக மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்​பட்டதில் இருந்து இங்கு வந்துசெல்கிறேன். தமிழக அரசின் நிர்வாகத் திறனற்றச் செயல்பாடுகளைத் தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறேன். வெள்ளத்தில் சென்னை மக்கள் தவித்தபோது, பி.ஜே.பி தரப்பில் இருந்து இந்த அரசின் குறைபாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எடுத்துரைத்தால்தான் மக்கள் சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் எங்களுடன் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை. அதனால் இந்தப் புகாருக்கும், அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி குறித்து பி.ஜே.பி-யிடம் பேசினார்கள். அந்த நேரத்திலும் எங்களுடைய நிலைப்பாடு ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. கூட்டணிக்குள் வரவில்லை என்பதால்தான் இவ்வாறு பேசுகிறார்கள் என்பது முற்றிலும் நியாயமற்ற ஒன்று.”

“பியூஷ் கோயலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கொடுத்துள்ளார். அதற்கு உங்கள் விளக்கம் என்ன?” 

“இது பி.ஜே.பி-க்கும் தமிழக அரசுக்குமான மோதல் அல்ல. ஓ.பி.எஸ்-ஸுக்கு பியூஷ் கோயல்தான் பதில் சொல்வார். மத்திய அமைச்சர்கள் யார்? யார்? எந்தெந்தத் திட்டங்களுக்காக முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள் என்பதைப் பற்றியெல்லாம் நான் கூறவிரும்பவில்லை. என்னுடைய கவனத்துக்கு வந்தவற்றை நான் கூறுகிறேன்.”

“முதலமைச்சராக ஜெயலலிதாவை ஏற்கிறீர்களா?”

“தமிழகத்தில் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? எத்தனை நாட்கள், எத்தனை மணிநேரம் சாதாரண மக்களுடன் கலைந்துரையாடினார். ஆணவக்​கொலையால் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசியுள்ளாரா? சட்டம் – ஒழுங்குப் பிரச்னை, மீனவர்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றில் தலையிட்டுத் தீர்வு கண்டிருக்கிறாரா? முதல்வர் என்பவர் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சந்திப்பவராக இருக்க வேண்டும். இதைதான் பி.ஜே.பி எதிர்பார்க்​கிறது.

ஜெயலலிதாவின் திரைமறைவு நடவடிக்கையால் தமிழகத்தின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறை முடங்கியுள்ளது. புதிய முதலீடுகள் எதுவும் வரவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. எனவே, புதிய அரசியல் சூழலுடன் கூடிய புதிய தலைமை வரவேண்டும். நல்ல அரசு அமைய வேண்டும். அதுதான் தமிழக மக்களுக்கு தற்போதையத் தேவை.”

“எந்த நம்பிக்கையில் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறீர்கள்? எதை முன்வைத்து உங்கள் முழக்கங்கள் இருக்கும்?” 

“ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவதே நல்ல அரசுக்கு வழிவகுக்கும். அதை முன்னெடுத்தே எங்களது பிரசார வியூகம் இருக்கும். இதுவே, இந்தத் தேர்தலில் எங்களது முழக்கமாக இருக்கும். தற்போது ஆட்சி செய்துவரும் அ.தி.மு.க-வின் மீதும், அதேபோன்று காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருந்த தி.மு.க-வின் மீதும் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஊழல் உருவானதற்கு காங்கிரஸ் கட்சியும் பொறுப்பேற்றாக வேண்டும். குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கும் இளைய தலைமுறையினர் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்களைக் குறிவைத்தே பி.ஜே.பி-யின் பிரசாரம் இருக்கும்.” 

“தே.மு.தி.க., பா.ம.க., ச.ம.க போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். ஆனால், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமையவில்லையே? பி.ஜே.பி-க்கு தமிழகத்தில் அரசியல் செய்யத் தெரியவில்லையா?”

“தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், இரு கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை வரவேண்டும். நாங்கள் முன்வைப்பதை அவர்கள் ஏற்க வேண்டும். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை எங்களுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும். அதன் பின்னரே கூட்டணி உருவாகும். அப்படியில்லாதபோது கூட்டணி சாத்தியமில்லை.”

“பி.ஜே.பி-யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”

“தமிழகத்தில் பி.ஜே.பி வலிமையாக காலூன்றி உள்ளது. இங்கு தூய்மையான, நேர்மையான அரசியல் தேவைப்படுகிறது. வரும் நாட்களில் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழ உள்ளது.”

“விஜயகாந்த் அணி – மக்கள் நலக் கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”  

“கூட்டணியில் உள்ள கட்சிக்குள்ளேயே குழப்பம் இருக்கிறது. ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுடன் பேசுகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு எதிராகக் களமிறங்குகிறார்கள். தூய்மையான, ஊழலற்ற, நிலையான அரசை யார் கொடுப்பார்கள் என்பதை மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.”

நன்றி ஜூனியர் விகடன்

Leave a Reply