`குஜராத்தில் இருந்து வருத்தத்தோடு திரும்பி வந்தேன்!’ – தேர்தல் அனுபவத்தை விவரிக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்.

நாடாளுமன்றத் தேர்தல் பார்வையாளராக 25 நாள்கள் குஜராத்தில் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ். தேர்தல் முறைகேடுகள், பணவிநியோகம், வேட்பாளர்களின் அத்துமீறல்கள், சர்ச்சைப் பேச்சுகள் என ஏராளமான புகார்களைச் சந்தித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான். `குஜராத் மாநிலத் தேர்தல் அனுபவத்தைச் சொல்லுங்கள்?’ என்ற கேள்வியை சகாயத்திடம் முன்வைத்தோம்.

“இந்தியா முழுவதும் உள்ள 1,500 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளுக்குத் தேர்தல் பார்வையாளர்களாகப் புணிபுரிவதற்கான அழைப்பு வந்தது. இந்த உத்தரவை ஏற்று, கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி டெல்லி சென்றோம். `யாருக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்படும்?’ என்பது யாருக்கும் தெரியாது. `மேற்கு வங்கம் கிடைக்குமா, ஜம்மு-காஷ்மீர் கிடைக்குமா அல்லது வடகிழக்கு மாகாணம் கிடைக்குமா?’ என யோசித்துக் கொண்டிருந்தோம். எனக்கு வந்த ஆர்டரில் குஜராத் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. குஜராத்தில் எந்தத் தொகுதி எனப் பார்த்தால் போர்பந்தர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவின் 543 தொகுதிகளில் எனக்குப் போர்பந்தரைக் கொடுத்ததில் மகிழ்ச்சி. `காந்தி பிறந்த ஊராக இருப்பதால், தமிழகத்தைப்போல அங்கு ஏதாவது நடக்கும், அதிரடிகளைக் காட்டலாம்’ என நம்பித்தான் கால் வைத்தேன். ஆனால்..?” – ஆச்சர்யம் விலகாமல் நம்மிடம் விவரித்தார் சகாயம்.

“ காந்தி பிறந்த மாநிலம் என்பதால் அங்கு மதுவிலக்கு அமலில் இருக்கிறது. மது சப்ளை, பண விநியோகம் என ஏதாவது புகார்கள் வரும் எனக் காத்திருந்தேன். நான் பணியில் இருந்த நாள்களில் வெறும் ஓரிரு புகார்கள்தான் வந்தன. அதுவும் பணம் தொடர்பானது அல்ல. `யாராவது சிக்கட்டும்’ எனக் காத்திருந்தேன். ஒரு பைசாவைக்கூட பறிமுதல் செய்ய முடியவில்லை. பொதுவாகத் தேர்தல் பார்வையாளர் என்ற முறையில் பணவிநியோகம் நடக்கிறதா எனப் பார்ப்பது வழக்கம். கடந்த கால தேர்தல் அனுபவத்தில் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன். இந்தப் பின்னணியை மனதில் ஓடவிட்டுக் கொண்டே, `சர்ச்சைக்குரிய புகார்கள் வரும்… வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்’ என எதிர்பார்த்துக் காத்திருந்தேன். `சிறிய புகாராக இருந்தாலும் அனுப்புங்கள்’ எனத் தகவல் அனுப்பிக்கொண்டே இருந்தேன். ஓர் இடத்தில் இருந்துகூடப் பணம் கொடுத்ததாகப் புகார் வரவில்லை. மது விநியோகம் செய்ததாகவும் புகார் இல்லை. பெரிய அளவுக்குக் கூட்டங்களைக்கூட்டி வந்து மக்களுக்குப் பணம் கொடுத்ததாகவும் புகார் வரவில்லை. பிரசாரத்திலும் அதிகளவு வாகனங்களைக் காண முடியவில்லை.

தேர்தலைப் பொறுத்தவரையில் மக்கள் அதைச் சாதாரணமாகத்தான் எடுத்துக்கொள்கிறார்கள். தேர்தலை வியாபாரமாக மாற்றினால்தான், பணவிநியோகம் அதிகளவில் இருக்கும். கடற்கரையையொட்டியுள்ள நகரமாக போர்பந்தர் இருக்கிறது. மீன்பிடித் தொழிலும் விவசாயமும் மக்களின் பிரதான தொழிலாக இருக்கிறது. தேர்தலை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் மக்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கு பிரதான போட்டியாளர்களாகப் பா.ஜ.க-வும் காங்கிரஸும் இருக்கின்றன. நான் இருந்த நாள்களில் இரண்டே புகார்கள்தான் வந்தன. அங்குள்ள முனிசிபல் கமிஷனரை `சீஃப் ஆபீசர்’ என அழைக்கிறார்கள். `அவர் நீண்ட நாள்கள் பணியில் இருக்கிறார், சிலருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். அவரை மாற்ற வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார்கள். இதுகுறித்து கலெக்டருக்குக் கடிதம் எழுதி, நடவடிக்கை எடுக்க வைத்தேன். அடுத்ததாக, பா.ஜ.க வேட்பாளர் ஒருவர் சிலரிடம் ஆசி வாங்குவது தொடர்பான புகார் வந்தது. இதைப் பற்றி விசாரணை நடத்தச் சொன்னேன். `அதில் எந்தவித விதிமீறலும் இல்லை’ எனத் தகவல் வந்தது. இதைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக எந்தப் புகாரும் இல்லை.

`காந்தி பிறந்த மண்ணுக்கு வந்துவிட்டு வெறும் கையோடு போகக் கூடாது’ என்ற முடிவில்தான் அந்த ஊரில் கால் வைத்தேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கான தளமே இல்லாமல், கையைக் கட்டிப்போட்டதுபோல் ஆகிவிட்டது. அதிரடிக்காகச் சென்றுவிட்டு எந்தவித அதிரடியும் செய்ய முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான். நானும் கண்கொத்திப் பாம்பாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய உதவியாளர்களிடமும், `என்னப்பா… ஏதாவது புகார் வந்திருக்கிறதா?’ எனக் கேட்டுக் கேட்டு சலித்துப் போய்விட்டது.

என்னுடைய இத்தனை ஆண்டுக்கால வருவாய் ஆட்சிப் பணியில் நடவடிக்கையே எடுக்காமல் திரும்பியது குஜராத்தில் மட்டும்தான். அங்கு கொண்டல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது மத்திய போலீஸ் படை அங்கு வந்திருந்தது. அதில் இருந்த நம்மூர் ராணுவ வீரர்கள் சிலர், என்னை அடையாளம் கண்டுகொண்டு பேசினர். `சார்… உங்களோடு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறோம்’ என உற்சாகத்தை வெளிப்படுத்திய சம்பவமும் நடந்தது. தேர்தல் நேர்மையாக நடப்பதில் ஒரு வகையில் மிகுந்த மகிழ்ச்சிதான். என்னுடைய தொகுதியில் இருந்து எந்தப் புகார்களும் வரவில்லை. மீண்டும் வாக்கு எண்ணிக்கை நாளன்று போர்பந்தர் செல்ல இருக்கிறேன்” என நெகிழ்ச்சியோடு பேசி முடித்தார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

Tags:

Comments are closed.