அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 2022ல் இந்தியா சிறந்து விளங்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்துக்கு அறிவியல் அறிஞர்கள், இளைஞர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், ஐஐடி ஆகியவை இணைந்து இந்த சர்வதேச அறிவியல் திருவிழாவை நடத்துகின்றன. இந்த விழா வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.

விழாவில் ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித் துறை அமைச்சர் அப்துல் லத்தீப் ரோஷன், வங்கதேச அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் யாபிஸ் ஓஸ்மான், மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியதாவது: வரும், 2022க்குள், நம் நாட்டில், அனைவரும் சுபிட்சமாக இருக்கவேண்டும் என்பதே, பிரதமர் மோடியின் கனவு.
அவரின் கனவை நனவாக்குவதன் முன்னோடியாக, மூன்றாவது ஆண்டாக, இந்தியசர்வதேச அறிவியல் கண்காட்சி நடக்கிறது. இக்கண்காட்சி நடத்துவதற்கு முன், உலக பட்டியலில் இடம்பெறாமல் இருந்த, இந்திய கல்வி நிறுவனங்கள், முதல், 100 மற்றும், 75 நிறுவனங்கள்பட்டியலில், இருஆண்டுகளாக இடம் பெற்றுள்ளன; அந்த அளவுக்கு முன்னேற்றம் உள்ளது.


நம் தொழில்நுட்பங்களை, உலக நாடுகள் கவனிக்கின்றன. குறிப்பாக, இந்தியவிண்வெளி ஆராய்ச்சியை பார்த்து, அறிவியல் உலகமே வியக்கிறது. வளர்ந்த நாடுகளும், தங்களின் செயற்கைக்கோள்களை, இங்கிருந்து ஏவுகின்றன. அது போல், மற்ற துறைகளிலும், நாம் வளர வேண்டும். இவ்வாறு ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். 

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது: அறிவியல் கிராமம் என்ற பெயரில் ‘பாராளுமன்றத்தில் இருந்து பஞ்சாயத்து’ என்ற மாதிரி அமைப்பு சென்னை தோல்ஆராய்ச்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 1750 மாணவர்கள், 200 ஆசிரியர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். மாணவ, மாணவியர் அறிவியல் ஆய்வுகளில் இளம் வயதில் இருந்தே ஈடுபட வேண்டும். மேலைநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்திய மாணவர்கள் அறிவியலில் ஈடுபடுவது குறைவுதான். அடிப்படை அறிவியலில் தாவரவியல், விலங்கியல் தவிர்த்து தொழில்நுட்ப அறிவியல், ஸ்டெம்செல் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, மருந்து கண்டுபிடிப்பு அது தொடர்பான தொழில் நுட்பம் சார்ந்த ஆய்வு படிப்புகளையே அதிக அளவில் தேடிச் செல்கின்றனர்.

இந்தியர்கள் பற்பல அறிவியல் தொழில்நுட்ப சிந்தனைகளில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்பவர்கள். அதனால்தான் புதுமை கண்டுபிடிப்பு தொடக்க திட்டம் மூலம் மனித வள மேம்பாட்டை உயர்த்த தமிழக அரசு ரூ.20 கோடி வழங்கியுள்ளது. அறிவியல்  வரலாற்று பின்னணியில் வளர்ந்த, ஆய்வாளர்கள் மற்றும் இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சாதனை படைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.

Leave a Reply