இந்தியாவில்  ராணுவதளவாட தொழிற் சாலைகளை அமைக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை விடுத்துள்ளார். 

சிங்கப்பூரில் நடைபெறும் இந்தியா – ஆசியான் மாநாடு, கிழக்கு ஆசியமாநாடு, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றுள்ளார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்கு பின்னர், அந்நாட்டு பிரதமர் Lee Hsien Loong -யை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்படுவதன் மூலம் ஆசியாவில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படுமென பிரதமர்  அப்போது குறிப்பிட்டார்.

இதேபோன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.  வர்த்தகம், அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

சிங்கப்பூர் Fullerton ஓட்டலில் நடைபெற்ற பொருளாதார தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். 16 நாடுகள் பங்கேற்றுள்ள மாநாட்டின் கண்காட்சியில் இந்தியா சார்பில் 18 நிறுவனங்கள் அமைத்துள்ள அரங்குகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

30,000பேர் பங்கேற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா நிதித்துறை சார் அறிவியல் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவருகிறது. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பணபரிமாற்றத்தை இந்தியா எளிமையாக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பண பரிமாற்ற மோசடிகளில் ஈடுபடுவோரை தண்டிக்க புதிய தொழில்நுட்பங்களை இந்திய அரசு பயன்படுத்தும் என மோடி கூறினார். இந்தியாவில் தொழில்தொடங்க நிதி சார் தொழில் நுட்ப நிறுவனங்கள் முன் வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன் பின்னர் அமெரிக்க துணை அதிபர் மைக்பென்சை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருதரப்பு உறவை வலுப்படுத்துவது, பயங்கரவாத ஒழிப்பில் இணைந்து செயல்படுவது, சர்வதேச விவகாரத்தில் ஒன்றிணைந்து பாடுபடுவது என பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய பிரதமர் , இந்தியாவில் ஆயுதங்களை தயாரிக்க அமெரிக்காவுக்கு நல்லவாய்ப்பு உள்ளது என்றார். மேலும் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவ அமெரிக்கா முன்வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் பேசிய மைக் பென்ஸ், பொருளாதார ரீதியில் இந்தியா வளர்ந்துவருகிறது என்றார். சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பு நன்றாக இருப்பதாக அவர் பாராட்டுதெரிவித்தார்.

இதன் பின்னர் ஆசியான் மற்றும் கிழக்காசிய மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். 

Leave a Reply