அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றது முதலே உலகின் மற்றநாடுகளுடன் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவுடனும் வர்த்தகப்போர் மூண்டது. இங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். இந்திய அரசும் பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு அதிகவரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளும் வர்த்தக ரீதியில் இணைந்து செயல்பட இணங்கிவந்தன. இந்தியாவுடனான வர்த்தகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக ட்ரம்பும் ஒப்புக்கொண்டார். கொரோனா வந்தபிறகு வர்த்தக உறவில் சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில் தற்போது புதிய உத்வேகத்துடன் இருநாடுகளும் வர்த்தக உறவைப் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து முதலீடுசெய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஆண்டில்மட்டும் கூகுள், அமேசான் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் 20 பில்லியன் டாலருக்குமேல் முதலீடு செய்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா பிரச்சினை குறித்துப்பேசிய மோடி, கொரோனா என்ற கொடியநோய் வந்தபிறகு உலக நாடுகள் சர்வதேசளவில் விநியோகச் சங்கிலியை எவ்வாறு கையாளவேண்டும் என்று கற்றுத் தந்துள்ளதாகவும், மதிப்பு மட்டுமல்லாமல் நம்பிக்கை சார்ந்தும் வர்த்தகம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச முதலீட்டுக்கான அனைத்து அம்சங்களும் இந்தியாவில் கொட்டிகிடப்பதாகக் கூறியுள்ள மோடி, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் வந்து அதிகமாக முதலீடுசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்கா மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளும், ஆஸ்திரேலியா – ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாமீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தயங்காமல் முதலீடு செய்வதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா மூலோபாய தொழில் மாநாட்டில் வீடியோ கான்பெரன்ஸ் வாயிலாகப் பங்கேற்ற மோடி, இவ்வாறு பேசியுள்ளார்.

Comments are closed.