உலகநாடுகள் அனைத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள பயங்கர வாதத்தை முறியடிக்க இந்தியா – எகிப்து இடையேயான பாதுகாப்பு உறவில் கூடுதல்ஒத்துழைப்பை ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா அல்-சிஸி, இந்தியாவுக்கு அரசு முறைப்பயணமாக வியாழக்கிழமை வருகை தந்தார். மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்தியா வந்துள்ள அல்-சிஸி, பிரதமர் நரேந்திரமோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அப்போது, இந்தியா – எகிப்து இடையேயான வர்த்தக மற்றும் கலாசார உறவுகள் குறித்தும், பாதுகாப்புவிவகாரங்கள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளத் தேவையான ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து, இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள எகிப்து அதிபர் அல்-சிஸியை நாட்டின் 125 கோடி மக்கள் சார்பில் வரவேற்கிறேன். அவருடான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்தது.

பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அதனை அழிப்பது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுடன் உடன்படும் நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். பயங்கர வாதத்தை முறியடிக்கும் வகையில் இந்தியா – எகிப்து இடையான பாதுகாப்பு உறவில் கூடுதல் ஒத்துழைப்பு அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இணைந்துமேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும்வகையில், சரக்கு கப்பல் போக்குவரத்துத்துறை தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்திடப் பட்டுள்ளது என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply