இந்தியாவை "சகிப்புத் தன்மையின் பல்கலைக் கழகம்' என்று வர்ணித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், நாட்டில் மத ரீதியிலான அடக்கு முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


இந்திய கிறிஸ்தவகவுன்சில் சார்பில் தில்லியில் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
கிறிஸ்தவ மதமானது இந்தியாவுக்கு சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்புவந்தது. கேரளத்தில் புனிததோமையார் ஆலயம் அமைந்தது. இது உலகின் மிகத்தொன்மையான தேவாலயங்களில் ஒன்றாகும்.


புனித தோமையார் முதல் அன்னைதெரஸா வரை கிறிஸ்தவர்கள் ஆற்றிய பங்களிப்பை இந்தியா என்றும் மறக்காது. அவர்கள் நமதுசமூகத்தில் உள்ள தீமைகளை அகற்றப் போராடினர். புனிததோமையார், சகோதரி நிவேதிதா, பிகாஜி காமா, அன்னை தெரஸா உள்ளிட்ட அருளாளர்கள் அனைவருமே இந்தியாவில் மதித்துப் போற்றப்பட்டனர். சகிப்புத்தன்மையின் பல்கலைக்கழகமாக இந்தியா இருந்திருக் காவிட்டால் இவர்களுக்கு இத்தகைய மரியாதை திடைத்திருக்காது.


இங்கு நமது கருத்தை நாம் யார்மீதும் திணிப்பதில்லை. நாட்டில் சகிப்புத்தன்மை அந்த அளவுக்கு உள்ளது. கடவுள் ஒருவரே. அவரைப் பற்றிய விளக்கங்கள்தான் பல்வேறுவகைகளில் இருக்கின்றன.


தில்லியில் கடந்த சட்டப்பேரவைக்கு தேர்தலுக்கு முன், தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனால், தேர்தலுக்குமுன்போ, பின்போ, இந்தியாவில் மதரீதியிலான அடக்குமுறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதைக் கூறவிரும்புகிறேன்.


கடந்த 1947இல் இந்தியா மதஅடிப்படையில் பிரிக்கப்பட்டது. அப்படி இருந்தும் மதச்சார்பற்ற நாடாக இருக்கவே இந்தியா விரும்பியது. நம்மிடம் இருந்து பிரிந்துசென்ற நாடு (பாகிஸ்தான்) தன்னை ஒரு மதச்சார்புடைய நாடு என்று பிரகடனம் செய்துகொண்டது.


சிலநாடுகள் தங்களின் அரசுக் கொள்கையாக பயங்கரவாதத்தை வைத்திருப்பது துரதிருஷ்டவசமானது. மக்களிடையே கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமே தவிர, துப்பாக்கிகளால் தீர்க்கமுடியாது.


ஒருபயங்கரவாதி எந்தவொரு ஜாதியையோ, இனத்தையோ, மதத்தையோ சார்ந்தவர் கிடையாது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளும் பயங்கர வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சிலர் மதத்துடன் பயங்கரவாதத்தைத் தொடர்பு படுத்துகின்றனர். எனினும் அது தவறானது.


இந்தியாவில் அனைத்து மதங்களையும் சேர்ந்தமக்கள் மதிக்கப்படுகின்றனர். இந்த நாட்டில் தான் இஸ்லாம் மதத்தின் அனைத்து பிரிவினரும் வாழ்கின்றனர். அனைத்து முக்கிய மதங்களை சேர்ந்தவர்களும் இந்தியாவில் உள்ளனர் என்றார் ராஜ்நாத்சிங்.

 

Tags:

Leave a Reply