இந்தியா மிகச்சிறந்த பலமான நாடாக மாறும் என்றும் அதற்கான முயற்சியின் போது சர்வாதிகாரம் நிறைந்த ஹிட்லர்களை உருவாக்காது என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் கூறினார்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது டெஹு. இங்குதான் மகான் துக்காராம் பிறந்தார். இந்த ஊரில் வைதீக பள்ளி தொடக்க விழா நடந்தது. பள்ளியை திறந்து வைத்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது: 

உலகின் மிகப் பழைமையான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்தவகையில், உலக நாடுகளுக்கு எல்லாம் நாம்தான் மூத்த சகோதரர்களாக இருக்கிறோம். ஆன்மிகத்தில் நீண்டபாரம்பரியம், மகான்களின் வழிகாட்டுதல்கள் போன்ற அரிய பலவிஷயங்களுடன் உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கும் அந்தஸ்தை பெறுவோம்.

இந்தியா சிறந்த நாடாக பலமுள்ள நாடாக ஒருநாள் மாறும். அதற்கான எல்லாவளமும் இங்கு இருக்கின்றன. நமக்குதேவை அர்ப்பணிப்புள்ள மக்களும் சமூகமும்தான். இவை கிடைத்துவிட்டால் புத்தர் மீண்டும் பிறப்பார். சங்கராச் சாரியார் மீண்டும் பிறப்பார், புனிதர்கள் மீண்டும் வருவார்கள். ஆனால், ஹிட்லர்கள் பிறக்கமாட்டார்கள்.

கடந்த காலங்களில் நம் இந்தியமக்கள் சைபீரியாவுக்கும் மெக்சிகோவுக்கும் பயணம்செய்தனர். ஆனால், அவர்களுடைய நிலத்தை நாம் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்க வில்லை. அதற்கு பதில் யோகா, ஆயுர்வேதா, கணிதம், அறிவியல் போன்ற அறிவுகளை பரப்பினோம்.  இவ்வாறு மோகன்பாகவத் பேசினார்.

Leave a Reply