பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்ட நல்லெண்ண முயற்சியின் பலனாக இந்தியா – பாகிஸ்தான் இடையே சுமூகமான நட்பு ஏற்படதொடங்கியது.

இதைத்தொடர்ந்து இருநாட்டு வெளியுறவுத்துறை செயலாளர்களும் ஜனவரி 15–ந்தேதி இஸ்லாமாபாத்தில் சந்தித்துபேச திட்டமிட்டிருந்தனர்.

அந்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானபடை தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர்தாக்குதல் நடத்தினார்கள். இதன் காரணமாக 15–ந் தேதி நடக்க இருந்த பேச்சு வார்த்தையை இந்தியா ரத்துசெய்தது.

இதற்கிடையே தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கான புதிய இந்திய தூதர் கவுதம் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமரின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் நசீர்கானை சந்தித்துப் பேசினார்.

அவர்கள் இருவரும் ஜெய்ஷ் – இ – முகம்மது இயக்க தீவிரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி விவாதித்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளர்கள் கூட்டத்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி அடுத்தமாதம் (பிப்ரவரி) இஸ்லாமாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சு நடைபெற உள்ளது. அதில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சவுத்திரி இருவரும் பங்கேற்றுபேச உள்ளனர்.

Leave a Reply