வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசினா நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். வங்காளதேசத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அவரை பிரதமர் நரேந்திரமோடி நேரில் சென்று வரவேற்றார்.

அவரது சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான இன்று ஜனாதிபதி மாளிகையில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு சிகப்புகம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் சிலர் கலந்துகொண்டனர். இதையடுத்து, டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற ஹசீனா, காந்தி சமாதியில் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசினா-பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இரு நாட்டின் உயர்மட்டக் குழுவினரும் பங்கேற்றனர். இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசப் பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு முக்கிய துறைகளில் 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரதமர் மோடி பேசிய தாவது:-

சிவில் அணு ஆயுத ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்தியா-வங்காளதேசம் இடையே ஆக்கப் பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் முக்கிய திட்டங்களை செயல் படுத்துவதற்காக இந்தியா 4.5 பில்லியன் டாலர் அளவில் சலுகைக்கடன் வழங்கப்படும்.

ஆற்றல் பாதுகாப்பானது இந்தியா-வங்காள தேசம் வளர்ச்சி கூட்டாண்மையின் முக்கிய பரிமாணமாக உள்ளது. அதுதொடரும். இந்தியா-வங்காளதேச உறவுகளுக்கு டீஸ்டா நதி நீர் பங்கீடு முக்கியமானது. ஒப்பந்தம்செய்ய இந்தியா உறுதியாக உள்ளது. இந்தவிஷயத்தில் விரைவில் தீர்வுகாணப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Tags:

Leave a Reply