பயங்கரவாத ஆதரவுக்கருத்துகள் பரவுவதை எதிர்க்கும் இந்திய இளைஞர்களை பிரதமர் மோடி புகழ்ந்து பாராட்டியுள்ளார்.


மசூதிகளின் இமாம்களின் அகிலஇந்திய அமைப்பின் தலைவர் இமாம் உமர் அகமது இலியாசி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜமீருதீன் ஷா, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தலத் அகமது உள்ளிட்ட முஸ்லிம் அறிஞர்கள், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர்.


அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தவும், சிறுபான்மையினர் உள்பட சமூகத்தின் அனைத்துப்பிரிவினரின் சமூக-பொருளாதார ரீதியிலும், கல்வி ரீதியிலும் அதிகாரமளிக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்காக இக்குழுவினர், பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:


முஸ்லிம் அறிஞர்களிடம் பிரதமர் பேசுகையில், "பயங்கரவாத சிந்தனை பரவுதல் என்பது உலகின்பல்வேறு பகுதிகளையும் தற்போது பாதித்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவில் உள்ள இளைஞர்கள், பயங்கரவாதகருத்துகள் பரப்பப்படுவதை வெற்றிகரமாக எதிர்த்து முறியடித் துள்ளனர். இதற்கான பெருமை நமது மக்களின் நீண்ட, நெடிய பாரம்பரியத்தையே சேரும். இந்தப்பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது நமது கூட்டுப்பொறுப்பாகும். இந்திய கலாசாரமானது, பயங்கரவாதிகளின் சதித்திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்காது' என்று குறிப்பிட்டார்.


மேலும், வேலை வாய்ப்புக்கும், ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறுவதற்கும் அவசியமான கல்வி, திறன்மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். தவிர, இந்தியாவுக்கான ஹஜ்யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் முடிவை எடுத்ததற்காக சவூதி அரேபிய அரசை பிரதமர் பாராட்டினார். இந்திய முஸ்லிம்களுக்கு வெளி நாடுகளில் நற்பெயர் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
சவூதி அரசின் மேற்கண்ட முடிவுக்கு முஸ்லிம் அறிஞர்குழுவும் பாராட்டு தெரிவித்ததோடு, இதற்காக முயற்சி மேற்கொண்ட மோடிக்கு அவர்கள் நன்றிதெரிவித்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply