'இந்திய-ரஷிய உறவு நிலையானது. அந்த உறவுகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது. பாகிஸ்தானுடன் வலுவான ராணுவ உறவுகளை ரஷியா கொண்டிருக்க வில்லை. பாகிஸ்தானுடனான எங்கள் உறவுகள், இந்தியா-ரஷியா இடையிலான வர்த்தக உறவில் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை' என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உறுதிபடத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பின் அவர் இவ்வாறு கூறினார்.


ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மோடி அதைத் தொடர்ந்து ரஷியா சென்றடைந்தார். அதிபர் புதினின் சொந்தநகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அவருடன் நரேந்திர மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். தலைநகர் மாஸ்கோவுக்கு வெளியே இந்திய-ரஷிய தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.


புதினுடன் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து மோடி விரிவான பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, 'பொதுவாக சர்வதேச உறவுகள் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும். ஆனால் இந்திய-ரஷியா உறவுகள் ஏற்ற இறக்கங்களை காணவே இல்லை என்பதற்கு சரித்திரமேசாட்சி. இந்த உறவுகள் நிலையானவை'.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) இந்தியா இன்னும் ஒருவாரத்துக்குள் முழு அளவிலான உறுப்பினராகும் என்று புதின் கூறினார். இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராவதற்கு முக்கிய பங்காற்றியதற்காக புதினுக்கு மோடி நன்றிதெரிவித்தார்.


சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவின் ஷாங்காய் நகரில் எஸ்சிஓ அமைப்பை கடந்த 2001-இல் ஏற்படுத்தின.ரஷியாவும் இந்தியாவும் தூதரகஉறவுகளை ஏற்படுத்தி இந்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவடைவதாக மோடியுடன் புதின் தெரிவித்தார்.


இதனிடையே, இந்தியாவின் பிடிஐ செய்தியாளருக்கு புதின் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தவர் :காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறதா என்று மதிப்பிடுவது உங்களை (செய்தியாளர்கள்) பொறுத்தது.


ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தல் எங்கிருந்துவந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம். இந்தியா-ரஷியா இடையிலான உறவுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. அவை நிலையானவை. அந்த உறவுகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது.
இந்தியாவுடன் ரஷியா சிறப்பான உறவுகளைக் கொண்டிருப்பதாலேயே, மற்ற தோழமைநாடுகளுடன் இந்தியா கட்டுப்பாடான உறவுகளையே கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அப்படிக்கூறுவது கேலிக்கூத்தானது.
இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ரஷியாவும் ஒரு பெரிய நாடு. ரஷியாவும் இந்தியாவும் பல்வேறு பரஸ்பர நலன்களைக் கொண்டுள்ளன. இந்திய நலன்கள் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.


இருநாடுகளிடையே விரிவான பாதுகாப்புத்துறை உறவுகள் இருக்கின்றன. எங்களிடையிலான ராணுவஉறவுகள் முன்னெப்போதும் இல்லாதவகையில் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. ஏவுகணைகள் உள்ளிட்ட சிக்கலான துறைகளிலும் ரஷியா ஆழமான உறவுகளை இந்தியாவைத்தவிர வேறு எந்த நாட்டுடனும் கொண்டிருக்க வில்லை.


இந்தியாவுடனான ஒத்துழைப்பால் நாங்கள் பயனடைகிறோம். இந்தியா வுடனான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் மூலமே இது சாத்தியமாகிறது.இந்தியாவும், ரஷியாவும் அனைத்துவிவகாரங்கள் குறித்தும் வெளிப்படையான பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளன. இந்தியா எங்களது நெருங்கிய தோழமைநாடாகும். நாங்கள் ஒருவரை யொருவர் புரிந்து கொண்டுள்ளது மட்டுமின்றி ஒருவரையொருவர் ஆதரிக்கவும் செய்கிறோம் என்றார் புதின்.

 

Leave a Reply