தேர்தல் நேரமிது. அரசியல் சார்ந்த விஷயங்கள் கவனிக்கப்படுகிற அளவுக்கு பிற முக்கிய விஷயங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்காது. அந்த வகையில் கடந்த வாரம் மத்திய அரசு எடுத்த ஒரு அதிரடி முடிவு இந்திய விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்தது. இன்னும் சொல்லப் போனால் பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசு மிகவும் துணிச்சலாக இத்தகைய முடிவை எடுத்துள்ளது. அது வேறொன்றுமில்லை மான்சான்டோ மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளுக்கான விலையை மத்திய அரசு நிர்ணயித்துவிட்டது. அத்துடன் இல்லாமல் அளிக்க வேண்டிய ராயல்டியை (உரிமைத் தொகை) 74 சதவீதம் வரை குறைத்துவிட்டது.

மத்திய அரசின் இந்த முடிவு பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவுக்கு அதிர்ச்சியளித் திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ராயல்டி தொகையைக் குறைக்கப் போவதாக 15 தினங்களுக்கு முன்பிருந்தே செய்திகள் கசிந்து கொண்டிருந்தன. அப்போதே ராயல்டி தொகையைக் குறைத்தால் இந்தியாவிலிருந்து வெளியேறுவோம் என்று மான்சான்டோ மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அதாவது வெளியேறினாலும் பரவாயில்லை, விவசாயிகளின் நலன் முக்கியம் என்கிற ரீதியில் அரசு பருத்தி விதை விலையை நிர்ணயித்ததோடு, ராயல்டி தொகையையும் குறைத்துவிட்டது.

அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனம் மகிகோ பயோடெக் இந்தியா லிமிடெட் (எம்எம்பிஎல்) என்ற பெயரில் இந்தியாவில் செயல்படுகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் 49 நிறுவனங்களுக்கு போல்கார்டு 2 ரக விதையை விற்பனை செய்ய லைசென்ஸ் வழங்கியுள்ளது.

200 வகையான விதை மாதிரிகள் இருந்தாலும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவது போல்கார்டு 2 ரக விதைகள்தான். 90 சதவீத விவசாயிகள் இதைத் தான் பயன்படுத்துகின்றனர். 450 கிராம் பாக்கெட் டின் அதிகபட்ச விலை ரூ. 800 என மத்திய அரசு நிர்ணயித்துவிட்டது. இது முன்னர் ரூ. 1,100 வரை விற்பனை செய்யப்பட்டது. சீசனுக்குத் தகுந்தபடி விலையை மான்சான்டோ இந்திய நிறுவனம் நிர்ணயிக்கும். இதேபோல ஒரு பாக்கெட்டுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த ராயல்டி தொகை ரூ.163-லிருந்து ரூ.43 ஆக குறைக்கப்பட்டு விட்டது. விதை விலை ரூ. 751 ஆகவும் ராயல்டி தொகை ரூ. 49 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடி சீசன் தொடங்கும். அப்போதிருந்து புதிதாக நிர்ணயிக்கப்பட்ட விலை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையால் பருத்தி பயிரிடும் 80 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என தெரியவந்துள்ளது.

மரபணு மாற்ற விதை ஏன்?

விதைகளில் மரபணு முறையில் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த விதைகள் பூச்சிகளின் தாக்குதலை தாக்குப்பிடித்து வளரும் என்பது இதன் சிறப்பம்சம். அந்துப்பூச்சி, தட்டான், வண்டு, பருத்தி உருண்டைப் புழு, இலைப் புழு உள்ளிட்ட பூச்சிகள் இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை மூலம் வளரும் செடிகளைத் தாக்காது. இதனால் இத்தகைய பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து அடிக்கத் தேவையில்லை. பூச்சி மருந்துகளுக்கு ஆகும் செலவு மிச்சம். விளைச்சலும் அதிகரிக்கும்.

வழக்கமாக பயிரிடும் பருத்தி செடிகளில் கிடைக்கும் விளைச்சலைக் காட்டிலும் மரபணு விதைகளைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் விளைச்சல் அதிகம். இந்த காரணங்களால் இந்தியாவில் மரபணு விதைகள் விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. பாரம்பரிய விதைகள் என்றால் அதிலிருந்து விதைகள் எடுத்து மீண்டும் பயிர் சாகுபடி செய்யலாம். ஆனால் மரபணு விதைகளில் ஒரு முறை மட்டுமே விளைச்சல் செய்ய முடியும். இதனால் ஒவ்வொரு முறையும் மான்சான்டோ விதைகளைத்தான் விவசாயிகள் பயன்படுத்தியாக வேண்டும்.

2002-ம் ஆண்டிலிருந்து விவசாயிகளிடம் குறைந்த விலையில் விதைகளை விற்பனை செய்து வந்த மான்சான்டோ, விவசாயிகள் அதிக அளவில் தங்கள் நிறுவன விதைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிந்தவுடன் விலையை அதிகரிக்கத் தொடங்கியது.

மான்சான்டோ நிறுவனத்தின் சந்தை விரிவடைந்ததுடன், விவசாயிகள் பாரம்பரிய விதைகளை பயன்படுத்துவதும் குறைந்தது. இனி நமது விதைகளைத்தான் விவசாயிகள் பயன்படுத்தியாக வேண்டும் என்கிற நிலைமை உருவானதும் விலையை உயர்த்தியது மான்சான்டோ. இதை கண்டு விவசாயிகள் கொதிப்படைந்தனர். இது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைகள் சென்றன. இதையடுத்து பருத்தி விதை விலை கட்டுப்பாட்டுகுழு தனது பரிந்துரையை கடந்த ஜனவரி 27-ம் தேதி மத்திய அரசுக்கு அளித்தது. அதன் அடிப்படையில் விலையை அரசு நிர்ணயித்தது.

ராயல்டி குறைக்கப்படலாம் என செய்தி வெளி யான போது இந்தியாவில் தொடர்ந்து தொழில் புரிவது குறித்து தங்கள் நிறுவனம் பரிசீலனை செய்யும் என்று கூறினார் மான்சான்டோ இந்தியப் பிரிவுத் தலைவர் ஷிஸ்ரா திவேகர் நிருலா. ஆனால் இப்போது மான்சான்டோ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விலை நிர்ணயம் செய்வதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது.

ராயல்டி

இந்தியாவில் 2002-ம் ஆண்டிலிருந்து பருத்தி விதை விற்பனையில் ஈடுபட்டிருந்த போதிலும் 2005-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரையான காலத்தில் மான்சான்டோ நிறுவனத்துக்குக் கிடைத்த ராயல்டி தொகை ரூ. 4,479 கோடி.

இந்தியாவிலிருந்து வெளியேறினால் பாதிப்பு ஏற்படுமா என்று வேளாண் துறையைச் சேர்ந்தவர்களிடத்தில் கேட்டதற்கு, இப்போது வரும் மரபணு மாற்ற விதைகள் இலைப் புழு, ஒட்டுண்ணி, அபிட்ஸ் எனப்படும் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவற்றைத் தாங்குவதில்லை. மேலும் இளம் ரோஸ் நிற பந்துருண்டை பூச்சி தாக்குதலுக்கு ஆளாகிறது. இதனால் பாரம்பரிய விதைகளுக்கு மாறுவது குறித்து அறிவுரை கூறி வருகிறோம். மேலும் மரபணு மாற்ற விதைகளை பயன்படுத்தும்போது அருகிலுள்ள விலை நிலங்களிலும் இதே போன்ற விதைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். இதனால் விளை நிலங்கள் மலடாகின்றன. மண்ணின் சத்து நிலைத்திருக்க பாரம்பரிய விதைகள் சிறந்தவை. இவற்றில் வீரியமிக்க உயர் ரக விதைகளை உருவாக்கும் ஆராய்ச்சிகளும் தொடர்வதாகக் கூறுகின்றனர்.

விவசாயத்துக்கு ஆதரவாக எடுக்கும் எந்த நடவடிக்கையும் வரவேற்புக்குரியதே.

பருத்தி விவசாயிகளும் தற்கொலையும்

மரபணு மாற்ற விதைகள் வந்து விளைச்சல் பெருகியது என்று கூறினாலும் நாட்டில் ஆங்காங்கே விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்கின்றன. மஹாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திர மாநிலங்களில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் விவசாயிகள் மஹாராஷ்டிர மாநிலத்தில் விதர்பா பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 125 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போதிய விளைச்சல் இல்லாதது, பருவ மழை பொய்த்துப் போவது, வறட்சி இவைதான் இவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன.

50 சதவீதத்தினர் விவசாயத்தில்தான் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விவசாய தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் சம்பவமாகும். 2013-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதிலுமிருந்து 11,772 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது நாளொன்றுக்கு 44 பேர் வீதம் தற்கொலை செய்து கொண்டதாக அரசாங்கத்தில் தகவல் பதிவாகியுள்ளது.

சராசரியாக ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது எப்போதாவதுதான் மருத்துவரை நாடுவோம். சட்ட சிக்கல் வந்தால் வழக்கறிஞரைத் தேடுவோம். அழகிய வீடு கட்ட வேண்டுமென்றால் வடிவமைப்பாளரை வாழ்நாளில் ஒரு முறையாவது அணுகுவோம். ஆனால் நாம் மூன்று வேளை சாப்பிடுவதற்கு விவசாயிகள் ஒவ்வொருவரும் உயிரோடு இருந்தாக வேண்டும்.

நன்றி தி ஹிந்து

Leave a Reply