இமாச்சல பிரதேசத்தில் ஆட்சிமாற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த வீரபத்ரசிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டப் பேரவைக்கு வரும் நவம்பர் மாதம் தேர்தல்நடைபெற உள்ளது.

இந்நிலையில், சிம்லாவில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி கூறும்போது, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்ததைப்போல இமாச்சலிலும் மாற்றம் நிகழவேண்டும் என்றார்.

அவர் கூறும் போது, ''இப்போது காலங்கள் மாறிவருகின்றன. உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வீசும் தூய்மையான காற்று இமாச்சல பிரதேசத்தையும் நோக்கிப்பயணிக்கிறது. டெல்லியிலும் (மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி) இதேபோல் தூய்மையான காற்றுவீசுகிறது'' என்றார்.

இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் ஊழல் வழக்குகளில் சிக்கி இருப்பதை மறைமுகமாகக் குறிப்பிட்ட மோடி, ''நாட்டில் உள்ள முதல்வர்களிலேயே வழக்கறிஞர்களுடன் அதிகநேரம் செலவிடும் முதல்வர் (வீரபத்ர சிங்) இவர்தான். இந்தமாநில மக்கள் நேர்மையான தலைவரை எதிர்நோக்கி உள்ளனர்'' என்றார்.

Leave a Reply