அ.தி.மு.க. பிளவுபட்டதைதொடர்ந்து அந்த கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புஇருப்பதாக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறி வந்தார்.

இரட்டை இலையை முடக்க பா.ஜனதா சதிசெய்வதாக வைகை செல்வனும் குற்றம் சாட்டினார். இந்தநிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருப்பது பற்றி டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-

1989-ல் இதேபோன்ற ஒரு அரசியல் சூழல்உருவானது. அப்போதும் இரட்டைஇலை முடக்கப்பட்டது. இளம் வயதிலேயே இந்த அரசியல் சூழ்நிலைகளை கவனித்துவருவதால் இப்போதும் அதற்கான வாய்ப்பு உண்டு என்ற எனது கருத்தை தெரிவித்திருந்தேன்.

அந்த கட்சியின் சின்னத்தை முடக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை. சின்னம் முடக்கத்துக்கு பா.ஜனதா காரணம்அல்ல.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப் பட்டதுதான் அ.தி.மு.க. அவர்கள் இருவரது நோக்கமும் காப்பாற்றப் பட்டதாக தெரியவில்லை. எனவே முடக்கி வைக்கப்படுவது தான் சரியானதாக இருக்கும்.

மக்கள்விரும்பும் அ.தி.மு.க., ஜெயலலிதா சுட்டிக்காட்டிய அ.தி.மு.க. இப்போது இருக்கிறதா?காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மோடிகையில் இரட்டை இலை இருப்பதாக கூறுகிறார். அரசியல் ஞானம் தெரிந்தவர்கள் இவ்வாறு கருத்து தெரிவிக்கலாமா?

சின்னம் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி ஆர்.கே.நகரில் தினகரன் மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார்.

ஓ.பன்னீர் செல்வம் கையில் அதிகாரம் இருந்த போதே ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க எதுவும் செய்ய வில்லை என்ற கருத்தும் மக்களிடையே இருக்கிறது.

திமுக.-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ்கட்சியின் பெரிய தலைவர்களான வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோர் அதிமுக.வுக்கு இரட்டை இலையை பெற்றுக் கொடுக்க போராடுகிறார்கள். இதுதான் கூட்டணி தர்மமா? கூட்டணி தர்மப்படி நடப்பதாக இருந்தால் தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேவரவேண்டும்.

மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு நிச்சயமாக நல்லமாற்றத்தை தரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply