மத்திய அரசின் திட்டங்களை அ.தி.மு.க அரசு முடக்கி வைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். சேலம் மாவட்டம் சங்ககிரி பாஜ வேட்பாளர் முருகேசனை ஆதரித்து மகுடஞ் சாவடியில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது:


தமிழகத்தில் 3வது பெரியகட்சி பாஜ. எங்களுக்கு வாய்ப்புகொடுத்தால், தமிழகத்தை இந்தியாவின் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச்செல்வோம். தமிழகத்தில் தற்போது மக்களை ஏழ்மை நிலையில் வைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தலில் இலவசபொருட்களை கொடுத்து ஓட்டுகளை வாங்கி, சம்பாதிக்க பார்க்கிறார்கள். இப்படி இலவசங்களை கொடுத்து மக்கள் மூளையை மங்கச் செய்து விட்டார்கள். அம்மா வாட்டர், அம்மா கிரைண்டர், அம்மாமிக்சி, அம்மா லேப்டாப் என அனைத்து அரசு திட்டத்திலும் விளம்பரம் தேடிக்கொள்கிற அரசு செயல்படுகிறது. இலவசங்களுக்காக ரூ.11,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்ததொகையில், 25 ஆயிரம் பள்ளி கட்டிடங்களையும் 11 ஆயிரம் கிராமப்புற ஆரம்பசுகாதார நிலையங்களையும் கட்டியிருக்க முடியும்.

தமிழ்நாட்டில் குடி நீர் பிரச்னை, மின்சார தட்டுப்பாடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை போக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. தென்பிராந்தியத்தில் மேற்கொள்ளப் பட்டுவந்த 3450 மெகாவாட் மின் உற்பத்தியை, கடந்த 2 ஆண்டில் 5900 மெகா வாட்டாக பாஜக அரசு உயர்த்தியுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் மத்திய அரசு பலதிட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது, பிரதமர் மோடி வந்து ரூ.2 ஆயிரம்கோடி வழங்கினார். இங்குள்ளவர்கள் போல் முதலைக் கண்ணீர் வடிக்கவில்லை. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்

Leave a Reply