மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தை சேர்ந்த வரும் பாஜக தேசியசெயற்குழு மூத்த உறுப்பினருமான இல.கணேசன் (71) தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் செவ்வாய்க் கிழமை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான நஜ்மாஹெப்துல்லா (76), பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பதவியில் இருந்துவிலகினார். இதைத் தொடர்ந்து, அவரை மணிப்பூர் ஆளுநராக மத்திய அரசு பரிந்துரையின்படி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நியமித்தார். இதையடுத்து, 2018, ஏப்ரல் 2-ஆம் தேதிவரை பதவிக்காலம் கொண்ட தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நஜ்மாஹெப்துல்லா ராஜிநாமா செய்தார்.


இதனால், காலியான அந்த இடத்துக்கு வரும் அக்டோபர் 17-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கும் என்றும், மனுக்களை திரும்பப்பெற அக்டோபர் 6-ஆம் தேதி கடைசி நாள் என்றும் ஆணையம் அறிவித்தது.


இந்நிலையில், தமிழகத்தைச்சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மத்திய பிரதேச மாநிலத்தில் காலியான ஓர் இடத்துக்கான மாநிலங்களவை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.


தமிழக பாஜக மாநிலத்தலைவர், பொதுச்செயலர், பாஜக தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை இல.கணேசன் வகித்துள்ளார். மாநில, தேசிய அளவில் தனக்கென தனி அடையாள த்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டவர். மத்திய பிரதேச மாநில சட்டப் பேரவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், வேட்புமனுதாக்கல் முடிவடைந்த பிறகு, இல.கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.


தற்போது  தமிழகத்தில் இருந்து இல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினராவது பாஜக  தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.மாநிலங்களவை வேட்பாளர் அறிவிப்பையடுத்து, சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. நீண்டகாலம் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றவுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவைசெய்வேன் என்றார்.

Leave a Reply