1977-ல் கன்னியாகுமரி எம்.பி. ஆன குமரி அனந்தன் ஓடிப்போனார். வசந்தகுமார் கடந்த முறை தோற்றுவிட்டு பின்னர் ஓடிப்போய் நாங்குநேரியில் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்

“கடந்தமுறை ஒருலட்சத்து இருபத்து எட்டாயிரம் வாக்குகளில் என்னை நீங்கள் வெற்றிபெற வைத்தீர்கள். அதற்காக நான் நாற்பதாயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சிப் பணிகளை உங்கள் காலடியில் சமர்ப்பித்திருக்கிறேன். இந்தியாவில் எந்த தொகுதியிலும் நாற்பதாயிரம் கோடி ரூபாய் நிதிசென்றது இல்லை. மத்திய அரசு குமரி மாவட்டத்திற்கு கொண்டுவந்த திட்டங்களை நான் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். நாற்பதாயிரம்கோடி ரூபாய்க்கான திட்டங்களை கொண்டுவந்தது குறித்து விவாதம் நடத்த தயாரா என எதிர்கட்சியினர் கேட்டார்கள். நாளை கடத்தாதீர்கள் இன்றே நாம் விவாதம் நடத்துவோம் என்றேன்.

வசந்தகுமாரின் அண்ணன் குமரி அனந்தனும் துறைமுகம் கொண்டுவருவதாக சொன்னார். காங்கிரஸ் இப்போதைய வேட்பாளர் வசந்தகுமார் கடந்ததேர்தலில் வேட்பாளராக இருக்கும்போது வர்த்தக துறைமுகம் கொண்டு வருவேன் என்றார். இப்போது சரக்குபெட்டக மாற்று முனையம் அமைக்க விடமாட்டேன் என்கிறார். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார் வசந்தகுமார். எதையுமே கொண்டு வராமல் இருப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேவை இல்லையே.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த முறை எனக்கு வாக்களித்தார்கள். இந்த முறையும் மீனவர்களின் ஓட்டு எனக்கு தேவை. அதற்காக நான் அவர்களை ஒட்டுபோடும் இயந்திரமாக மட்டுமே பார்க்க விரும்ப வில்லை. அவர்களின் வாழ்க்கைக்கு தேவையானதை செய்து கொடுக்க விரும்புகிறேன். துறைமுகத்தின் இரண்டுபக்கமும் அரை கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம்தான் மீனவர்களின் கிராமங்கள் உள்ளன. துறைமுகம் அமையும் இடம் அருகே மீனவர்கள் அல்லாதவர்கள் நூற்றுக் கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதில்தான் பிரச்னைகள். ஒருமீனவர்கள் வீடோ, மற்ற யாருடைய வீடோ, இடமோ போகாது. வர்த்தக துறைமுகம் வரும்போது மீனவர்களே லைசென்ஸ் பெற்று ஏற்றுமதியாளராக வரவேண்டும்.

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று இறந்த 115 பேருடைய உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வந்துள்ளோம். எதற்காக படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பிணமாக வரவேண்டும். துறைமுகம்தான் இந்தமாவட்டத்தின் ஜீவநாடி. எட்டாவது முறையாக தேர்தலில் நிற்கிறேன். ஐந்துமுறை தோற்றிருக்கிறேன். இந்த மாவட்டத்தைவிட்டு ஓடிபோக வில்லை. 1977-ல் கன்னியாகுமரி எம்.பி. ஆன குமரி அனந்தன் ஓடிப்போனார். கடந்தமுறை குமரி அனந்தனின் தம்பி வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். வென்றாலும், தோற்றாலும் இங்கு இருப்பேன் என்றார். வசந்தகுமார் கடந்தமுறை தோற்றுவிட்டு பின்னர் ஓடிப்போய் நாங்குநேரியில் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். வேட்புமனு தாக்கலில் வசந்தகுமாரின் முகவரியில் சென்னை என குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த யாருக்காவது நீங்கள் சீட் கொடுத்திருக்கலாம்”.

அழகியமண்டபத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக பேசியது.

Leave a Reply