இளைஞர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவுத் திறனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்துவது அவசியம் என்றார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்.

தமிழகத்தைச்சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோருடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

  இதில் அவர் பேசியது:  மத்திய அரசு தற்போது அறிமுகப் படுத்தியுள்ள "எழுந்திரு இந்தியா' திட்டத்தின் மூலம் அதிக தொழில் முனைவோர் உருவாக்கப்படுவர். அவர்களுக்குத் தேவையான நிதி யுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பட்டம்பெற்ற பொறியாளர்கள் இதை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும்.

  இந்திய இளைஞர்களால் தான் அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் வளர்ச்சிபெற்றுள்ளன என்று நமது இளைஞர்களுக்கு பில்கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். எனவே முகநூல், கட்செவி-அஞ்சல் ("வாட்ஸ் ஆப்') போன்ற புதிய சமூக வலை தளங்களை உருவாக்க இந்திய இளைஞர்கள் பல்வேறு தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 மேலும் நாட்டின் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு இளைஞர்கள் தங்களின் தொழில்நுட்ப அறிவை முதலில் நமதுநாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் வல்லரசுப் பட்டியலில் இந்தியா விரைவில் இடம் பெறும்.

  விஜய் மல்லையா போன்று நாட்டை ஏமாற்றும் தொழிலதிபர்களுக்கு காங்கிரஸ் அரசு கடன்வழங்கியுள்ளது. ஆனால், முறுக்கு விற்பவர் பெரிய தொழிற்சாலைகளை தொடங்குபவர் வரை அனைவருக்குமான கடனுதவியை பிரதமர் நரேந்திரமோடி வழங்கி வருகிறார். இதிலிருந்தே இருகட்சிகளுக்குமான வித்தியாசத்தை மக்களால் உணர முடியும் என்றார் அவர்.

Leave a Reply