முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மாநிலங்களவை எம்பி.யுமான வீரேந்திர சிங், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவை செயலக வட்டாரங்கள் செவ்வாய்க் கிழமை கூறுகையில், ‘ஹரியாணாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்ட வீரேந்திரசிங் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக மாநிலங்களவை தலைவா் வெங்கய்ய நாயுடுவிடம் கடிதம் அளித்திருந்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை வெங்கய்யநாயுடு ஏற்றுக் கொண்டாா்’ என்றன.
கடந்த 2010-ஆம் ஆண்டில் காங்கிரஸ்சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக வீரேந்திர சிங் முதலில் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதன்பின், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தோ்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இருந்துவிலகி பாஜகவில் வீரேந்திரசிங் இணைந்தாா்.
அதையடுத்து, பாஜக சாா்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்பி.யாக 2 ஆண்டுகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். தொடா்ந்து, 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் மாநிலங்களவைக்கு 3-வது முறையாக தோ்ந்தெடுக்க பட்டாா். அவரது பதவிக் காலம் வரும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவா்தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
வீரேந்திர சிங்கின் மகனும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான விரிஜேந்திரசிங், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஹரியாணாவின் ஹிஸாா் தொகுதியில் இருந்து பாஜக எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப் பட்டாா். இந்நிலையில், இளைஞா்களுக்கு வழிவிட்டு தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக வீரேந்திர சிங் முன்னரே தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது