இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி பணத்தை திரும்ப எடுக்கிறபோது, 60 சதவீத தொகைக்கு வரிவிதிக்கப்படும் என்ற முடிவை மத்திய அரசு திரும்பபெற்றது.

 இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி பணத்தை திரும்ப எடுக்கிறபோது, 60 சதவீத தொகைக்கு வரி விதிக்கப்படும், 40 சதவீத தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு என்றும், இது ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட் உரையின் போது பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் கூட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்மீது வரிவிதிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நிதி மந்திரி அருண்ஜெட்லியை பிரதமர்  அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து அவரும் இபிஎப். மீது வரி விதிக்கும் முடிவை இப்போதைக்கு ரத்துசெய்ய தீர்மானித்து உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை பாராளுமன்றத்தில் பட்ஜெட்குறித்த விவாதத்தின்போது அவர் வெளியிட இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இபிஎப். வரி விதிப்பு முடிவை திரும்பபெறுவதாக மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி மக்களவையில் இன்று அறிவித்துள்ளார்.

Leave a Reply