காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. நேற்றைய தினம் காவிரி கண்காணிப்புக் குழு 3000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கூறிய போது, அது நீராவியாகத்தான் போகும், பயிர்களின் வேர்களுக்கு போதாது என்று கருத்து தெரிவித்திருந்தனர் தமிழக விவசாயிகள். இன்று உச்சநீதிமன்றம் தினமும் 6000 கனஅடி நீர் திறக்கப்பட வேண்டுமென்று சொல்லி இருப்பது, தமிழக விவசாயிகளுக்கு ஓரளவு பலனைத் தரும்.

அதே போல் காவிரி நதி நீர் ஆணையம் 4 வாரத்திற்குள் அமைக்கப்பட வேண்டும் என சொல்லி இருக்கிறது. உடனே இங்கு கருத்து சொல்பவர்கள், ஏதோ மத்திய அரசை கோர்ட் கண்டித்துவிட்டது, நிர்பந்தப்படுத்திவிட்டது என்று எதிர்மறை கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. எந்த உச்ச நீதி மன்றத்தில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்து வழக்கு நிலுவையில் இருந்ததால் மத்திய அரசால் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்க முடியவில்லையோ  , அதே உச்ச நீதிமன்றமே நதி நீர் ஆணையத்தை அமைக்கச் சொல்லி இருப்பதால் , மத்திய அரசிற்கு சட்டத்தில் இருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. இதுவரை நடந்த அமர்வுகளிலெல்லாம் உச்ச நீதி மன்றம் இந்த கருத்தை சொல்லவில்லை.

சென்ற அமர்வில் கூட, காவிரி கண்காணிப்புக் குழுவை அணுகுங்கள் என்று தான் சொல்லியிருந்தது. இன்று கூட, இரண்டு மாநிலங்களும் காவிரி கண்காணிப்புக் குழுவை ஒப்புக்கொள்ள மறுப்பதால் காவிரி நதி நீர் ஆணையம் அமைப்பது தான் சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. மத்திய அரசு வழக்கறிஞர் கூட ,2007ல் இருந்து காவிரி நதி நீர் ஆணையம் அமைப்பதற்கு  மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு நிலுவையில் இருந்ததால் தான் மத்திய அரசால் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் வாரியத்தை அமைக்க முடியவில்லை என்பதை தெளிவு பட எடுத்துச் சொல்லி இருக்கிறார். ஆக, இன்றைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, மத்திய அரசுக்கு இருந்த தடையை நீக்கி இருக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, மோடிஜியின் மத்திய அரசு தொடர்ந்து இரண்டு மாநிலங்கள் ஓர் நதியின் நீரை பங்கிட்டுக் கொள்ளும் போது எந்த மாநிலமும் வஞ்சிக்கப் படாது என்பதை மோடியின் அரசு தெளிவாக தெரியப்படுத்தி இருக்கிறது.

கர்நாடக காங்கிரஸ் அரசு, அணைகளில் நீர் இல்லை, அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் தமுடியாத நிலையில் இருப்பதாக சொன்ன போது, இல்லை போதிய அளவு தண்ணீர் இருக்கிறது என்று தெளிவாக அறிக்கை சமர்ப்பித்தது மத்திய நீர் வளத்துறை அமைச்சகம். அதன் அடிப்படையிலேயே தமிழகத்திற்கு நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்க ஆரம்பித்தது.

அது மட்டுமல்ல, கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்திப்பேன் என்றார். அங்கு தமிழர்களுக்கு எதிராக வன்முறையை காங்கிரஸ் அரசு கட்டவிழ்த்துவிட்டதால், அவரை சந்திப்பதை தவிர்த்து, மோடிஜி அவர்கள் நடுநிலையுடன் செயல்பட்டார். கேரள விழிஞ்சியம் போதும், தமிழக இனையம் தேவை இல்லை என பிரதமரிடம் முறையிட்ட கேரள முதல்வரின் வாதத்தை நிராகரித்து, தமிழக வளர்ச்சிக்கு இனையம் தேவை என்று உறுதியாக இருந்தார் பிரதமர் அவர்கள்.

இன்று தமிழகத்தின் மதுரை, தஞ்சை, வேலூர், சேலம் ஆகிய நகரங்கள், நவீன நகரங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசிற்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது. நாளைய தினம் மெட்ரோ விரிவுபடுத்தப்படுகிறது.

ஆக இப்படி தொடர்ந்து தமிழகத்திற்கு நன்மை செய்து வரும் மத்திய அரசை, காரணமில்லாமல் கடுமையாக விமர்சிப்பதையும், அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிப்பதையும், கட்சிகள் தவிர்க்க வேண்டும். அப்படி இல்லையென்றாலும், மத்திய அரசின் நல்ல நோக்கங்களையும், பிரதமரின் அன்பையும் தமிழக மக்கள் நன்றாகப் புரிந்தே வைத்திருக்கிறார்கள்.

தமிழக அரசு எடுத்த சட்ட நடவடிக்கையால் இந்த தீர்ப்பு கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில், காவிரி நதி நீர் ஆணையத்தைப் பொறுத்தமட்டில், கருத்து சொல்வதற்கோ, மத்திய அரசை விமர்சிப்பதற்கு,  காங்கிரஸிற்கோ, திமுகாவிற்கோ எந்த உரிமையும் கிடையாது, ஏனென்றால் தமிழக விவசாயிகள், பன்நெடுங்காலமாக காவிரிப் பிரச்சனையில் அடைந்த அத்துணை துன்பங்களுக்கும் இவர்களே காரணம் என்பதையும் தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

DR தமிழிசை சௌந்தரராஜன் மாநில தலைவர்

Leave a Reply