உட்கட்சிமோதல் உருவாகி காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது, இதுபோன்ற சூழல் ஏன் ஏற்பட்டது என்பதுபற்றி காங்கிரஸ் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அண்மையில்விலகி பாஜகவில் இணைந்தார். இதன் தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இதனால் பெரும்பான்மை இல்லாத சூழலில் முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன்வர வில்லை. இதையடுத்து இந்த சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடரை இன்று கூட்டவேண்டும் என்றும், மாலை 5 மணிக்குள்ளாக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திமுடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதன்படி இன்று பிற்பகல் ம.பி. சட்டப்பேரவைக் கூட்டப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அதற்குமாறாக முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் ஒப்படைத்தார்.

இந்தவிவகாரத்தில் பாஜகவை காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்குமுன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:

‘‘மத்திய பிரதேசத்தில் உட்கட்சி விவகாரத்தால்தான் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துள்ளது. அரசை கவிழ்க்கும் முயற்சியில் அல்லது அரசு அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. இதன்காரணமாக இந்த அரசு கவிழவில்லை. சொந்த தலைமையின் மீது நம்பிக்கையில்லாத சூழல் ஏற்பட்டதால் உட்கட்சி மோதல் உருவாகி காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது. இதுபோன்ற சூழல் ஏன் ஏற்பட்டது என்பதுபற்றி காங்கிரஸ் சுயபரி சோதனை செய்துகொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

Comments are closed.