உத்தரபிரதேச சட்ட  சபை தேர்தலின்போது, பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்குவந்தால் பெண்களிடம் குறும்பு செய்யும் நபர்களையும், சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளையும் ஒடுக்க ‘ஆன்டிரோமியோ’ படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்ததையடுத்து முதல்மந்திரி ஆதித்யநாத் ஆன்டி ரோமியோபடையை உடனடியாக அமைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்தபடை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முக்கிய நகரங்களில் உலா வந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பார்கள்.

உத்தரபிரதேசத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் டி.ஜி.பி. சுல்கான்சிங் மாநிலபோலீஸ் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர்போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ‘ஆன்டி ரோமியோ’ படை போலீசார் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 3 மணிநேரம் நடந்த இந்த கூட்டத்தில் ‘ஆன்டி ரோமியோ’ படையினர் எதை, எதை செய்யலாம். எதை செய்யக் கூடாது என்பது குறித்து டி.ஜி.பி. சுல்கான் சிங் விளக்கினார்.

‘ஆன்டி ரோமியோ’ படையில் உள்ள அனைத்து போலீசாரும் உடலில் பொருத்தக் கூடிய கண்காணிப்பு கேமராவை அணிந்திருக்க வேண்டும். அந்தகேமரா மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்கள் மற்றும் சமூக விரோதசெயல்களில் ஈடுபடுபவர்கள் செய்யும் செயல்களை ரகசியமாக படம்பிடிக்க வேண்டும்.

இதுபோன்ற குற்றங்களை செய்யும் மாணவர்கள், இளைஞர்களை உடனடியாக பிடிக்கவேண்டும். அவர்களை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டியதில்லை.

அவர்களுடைய பெற்றோரை அழைத்து அந்தநபர்களின் நடவடிக்கை குறித்து விளக்கவேண்டும். கேமராவில் எடுக்கப்பட்ட படகாட்சிகளையும் அவர்களிடம் காண்பிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்களாக இருந்தால் கல்லூரி முதல்வரிடம் இதுபற்றி தெரிவிக்கவேண்டும். ‘ஆன்டி ரோமியோ’ படையினர் விசாரணை நடத்துவது, வழக்குப்பதிவு செய்வது போன்ற பணிகளை செய்ய வேண்டியதில்லை. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யும் பணிகளை மட்டும் செய்ய வேண்டும்.

மேலும் பசுவதை தடுப்பு என்றபெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும். டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

Leave a Reply