சமீபத்தில், இந்தியாவில், லோக் சபா தேர்தல் நடந்தது. என்மீதும், என் அரசு மீதும், 130 கோடி
மக்கள் நம்பிக்கை வைத்து, இரண்டாவது முறையாக, எங்களை வெற்றி பெறச்செய்தனர்.
அவர்கள் சார்பாக, உங்களிடம் பேச, என்னை அனுப்பியுள்ளனர். என் மக்கள் சார்பாக, ஐ.நா., சபையில் பேசுவதை, மிகவும் பெருமையாககருதுகிறேன்.மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த ஆண்டை, உலகம் கொண்டாடி வருகிறது. அவரது அஹிம்சை கொள்கை, இன்றும் நமக்கு பொருத்தமாக உள்ளது.அமைதி, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கு, காந்தியின் அஹிம்சை கொள்கைதான் வழிகாட்டுகின்றன.

உலக வெப்பமயமாதலால், இயற்கை பேரழிவுகள் அதிகம் நடக்கின்றன. தட்பவெப்பத்தை பாதுகாக்கும் பிரசாரத்தில், உலகநாடுகள் பங்கேற்க வேண்டும். உலக வெப்பமயமாதலை தடுப்பதில், இந்தியா வின் பங்கு குறைவாக தான் உள்ளது. இந்தியாவில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, நாங்கள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ‘துாய்மை இந்தியா’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

ஒரு புறம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், 450 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து, பணியாற்றி வருகிறோம். மறுபுறம், சர்வதேசளவில், சூரிய மின்சக்தி கூட்டணி அமைக்கவும், முயற்சி எடுத்து வருகிறோம்.

இங்கு நான் வரும் போது, ஐ.நா., சபையின் சுவரில், ‘ஒருமுறை பயன்பாடு பிளாஸ்டிக்கை ஒழிப்போம்’ என, எழுதப்பட்டிருந்ததை பார்த்தேன். இந்தியாவில், ஒருமுறை பயன்பாடு பிளாஸ்டிக்கை, முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை, பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள், இந்தியாவில் மிகப்பெரிய சுகாதார திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கடந்த, ஐந்து ஆண்டுகளில், நாடுமுழுவதும், 12 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

அடுத்த, ஐந்து ஆண்டுகளில், காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க, இலக்கு
நிர்ணயித்துள்ளோம். ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க, ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ‘அனைவருடனும் ஒருங்கிணைவோம்; அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதே எங்களின் தாரகமந்திரம். எங்களின் கடினமான பணி, பகட்டு காட்டுவதற்காக அல்ல; மக்களின் நலன் கருதிய செயல்பாடே!.பயங்கரவாதம், ஒருநாட்டுக்கு மட்டுமே உள்ள பிரச்னையில்லை. இது, சர்வதேச அமைதிக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்.

மனித குலத்தின் விரோதியான பயங்கரவாதத்தை அடியோடு வேரறுக்க, நாம் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். பயங்கர வாதத்தை ஒழிப்பதில், அலட்சியம் காட்டக்கூடாது. நாட்டிற்கு, யுத்தம் வேண்டாம்; புத்தரின் கோட்பாடுகளே தேவை. மனித நேயத்துக்காக, உலகம் ஒன்றுபடவேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக, 1996ல், இந்தியா கொண்டு வந்த தீர்மானம், இன்னும் எழுத்து வடிவிலேயே உள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், நாம் பாரபட்சம் காட்டுவது, ஐ.நா., உருவாக்கப் பட்டதற்கான அடிப்படை கொள்கையையே சிதைத்துவிடும். அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893ல் நடந்த சர்வமத மாநாட்டில் பங்கேற்ற, சுவாமி விவேகானந்தர், வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றினார். உலக அமைதி, ஒற்றுமை குறித்து அவர் தெரிவித்த கருத்துகளை, இந்தியா பின்பற்றி வருகிறது.

இந்தியா எப்போதும் சுய நலமாக சிந்தித்த தில்லை. தமிழ் கவிஞர், கணியன் பூங்குன்றனார், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என, பாடியுள்ளார். உலகத்தை ஒரு குடும்பமாக பார்ப்பது தான், பாரதத்தின் பண்பாடு.

ஐ.நா., பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, ஆற்றிய உரை

Comments are closed.