''உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதார நாடாக,இந்தியா மாறிவருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

'வைப்ரன்ட் குஜராத்' எனப்படும், நான்குநாட்கள் முதலீட்டாளர்கள் மாநாடு, குஜராத்தின் காந்திநகரில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, கடந்த, 2003ல் துவக்கப்பட்ட,இந்த மாநாடு, இரண் டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

அதன், 8வது முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துவருகிறது. பிரபல நோபல் பரிசு பெற்றவர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் துறை யினர், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டை, நேற்று துவக்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

மகாத்மா காந்தி, சர்தார் படேல் பிறந்த குஜராத், தொழில்களுக்கான மாநிலமாகவும் விளங்குகிறது. இந்த மாநாட்டுக்கான ஆதரவு, வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனநாயகத்தால், மிகவும் விரைவான முடிவுகளை எடுக்கமுடியாது, சிறந்த நிர்வாகத்தை அளிக்க முடியாது என்ற வாதத்தை உடைத் தெறிந்துள்ளோம்.
கடந்த,இரண்டரை ஆண்டுகளில், இந்த அரசின் செயல் பாடுகளால், முதலீடு செய்வதற்கு,அன்னிய நிறுவனங்கள் அதிகளவில் வரத்துவங்கியுள்ளன. இது ஒரு துவக்கம்தான்.


இங்கு தொழில் துவங்குவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும், வாய்ப்புகளும் நிறைய உள்ளன. உலகளவிலான மிகப்பெரிய உற்பத்தி நாடுகளில், இந்தியா, ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும் ஆராய்ச்சிக்கான களமாகவும் விளங்குகிறது. பல்வேறு வகையான தரப்பட்டியல்களில், பின்தங்கியிருந்த நிலையில் இருந்து, படிப்படியாக உயர்ந்து வருகிறோம்.

உலகபொருளாதார வளர்ச்சியில், இந்தியாவின் பங்கு, 12.4 சதவீதமாக உள்ளது. ஜி.எஸ்.டி., எனப் படும், சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு உட்பட, பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள், இங்கு தொழில்துவங்கவும், முதலீடு செய்யவும், மிகப் பெரிய வாய்ப்பை அளிக்கிறது.

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருளாதார நாடாக, இந்தியாவை உயர்த்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மிகப்பெரிய இளைஞர் சக்தியை கொண்டுள்ளது என, முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்துமே இங்கு உள்ளது.

அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும், 10 நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறோம். மிகச்சிறந்த சேவையை அளிக்க வேண்டும் என்ற போட்டியும், இங்கு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply