உள்ளாட்சி தேர்தலில் பாஜக. முத்திரை பதிக்கும்’ என்று பிறந்தநாள் விழாவில் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் பிறந்தநாள் விழா, தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க, மாநில அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது.

அவருக்கு, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை, சந்தனமாலை, ஆளுயர மலர்மாலை மற்றும் மலர்கிரீடம் ஆகியவற்றை அணிவித்து வாழ்த்து கூறினார்கள். தாமரைவடிவிலான ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜ.க.வின் அகில பாரத தலைவர் அமித்ஷா தலைமையில் அலகபாத்தில் தேசியசெயற்குழு கூட்டம் வரும் 12 மற்றும் 13–ந்தேதிகளில் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பல்வேறு மாநில தேர்தல்முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், ஸ்மிரிதி இரானியை தொடர்ந்து, நிர்மலாசீதாராமன், ரவிசங்கர்பிரசாத், உமாபாரதி, கஜபதி மற்றும் ரூடி ஆகியோர் தமிழகத்தில் வேறுவேறு நகரங்களுக்கு வர உள்ளனர்.

தமிழக பொதுவினியோக திட்டத்திற்கு உணவுபொருட்கள் வழங்கல், தங்கம் வாங்குவதில் சலுகை, துறைமுக மேம்பாடு, புதிய சாலைகள் அமைக்கும்பணி உட்பட அனைத்து துறை வாரியாக பலதிட்டங்களை மோடி அரசு வழங்கி வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் கொண்டாட்டங்கள் தேவையா? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கேட்கிறார். தமிழகத்தில் இளங்கோவன், பா.ஜ.க. எதுசெய்தாலும் குறை கூறுகிறார். ஆனால் அவருடைய கட்சியில் உள்ள குறைகளை நீக்கிவிட்டு அடுத்தவர்களை பற்றி பேசவேண்டும்.

தமிழகத்தில் பால்விலை உயர்வு, கல்விகட்டணம் உயர்வு போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் பாஜக. போராட்டத்தில் ஈடுபடும்.

 

கட்சியில் சேர மிஸ்டுகால் அளித்த 50 லட்சம் பேர்களில் 15 லட்சம் பேரை நேரில் சந்தித்து கட்சியில் இணைத்து உள்ளோம். தமிழகத்தில் 3 தொகுதிகளில் இடைத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. தமிழக மக்களுக்கு நல்ல பலசேவைகளை தொடர்ந்து செய்வதற்கும் பா.ஜ.க.வினர் தேர்தல் அரசியல் விஞ்ஞானம் கற்றுக்கொள்ள வேண்டும்.

நல்லவர்கள், வல்லவர்களாக வலம்வந்தால் மட்டும் போதாது, தேர்தல் மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் யுக்தியை தெரிந்துகொள்ள வேண்டும். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளோம். இதில் பாஜக, முத்திரை பதிக்கும். தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தருவதுடன், பலம் பொருந்திய கட்சியாகவும் வருவதற்கு இந்த பிறந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply