மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் மூலம் புதிய இந்தியாவை உருவாக்கும் கனவு நனவாகிவருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் பேசியது:
நமது நாட்டின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. ஹுப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. மேலும் சில திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளன.உயர்கல்வி, விமான தொடர்பு, ஏழைகளுக்கு வீடுகள், ரயில்வே தொடர்புகள் போன்ற ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்.

ஹுப்பள்ளியில் இந்திய தொழில் நுட்பக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உயர் கல்வி மேம்படுவதற்கு இது உதவியாக இருக்கும். மங்களூரு, பதூரில் பெட்ரோல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹுப்பள்ளி-தார்வாட்டை பொலிவுறு நகரங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப் படுகிறது. 73 லட்சம் வீடுகள் கட்டும்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இதில் 15 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப் பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளன. மேலும் 39 லட்சம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

குழந்தைகளுக்கு கல்வி,இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம் போன்றவற்றை வழங்கி அனைவருடனும் அனைவருக்கும் வளர்ச்சி என்ற கனவை நனவாக்கி வருகிறோம். ஏழைகளுக்கான திட்டங்கள் அவர்களைச் சென்றடைவதை தலைமை ஊழியனான நான் உறுதிசெய்துள்ளேன்.

பயனாளிகளுக்கு திட்டப்பயன்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. அதனால் தான் நேர்மையானவர்கள் மோடியை நம்புகிறார்கள். ஆனால், ஊழல்வாதிகள் மோடியைக் கண்டால் அஞ்சுகிறார்கள்.

பருவநிலை மாற்றம் அடைந்துவரும் நிலையில், கர்நாடக அரசியலில் மாற்றம் வரும் சூழ்நிலை உருவாகும். கர்நாடகத்தில் நடக்கும் கூட்டணி அரசு நாடகம் நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியில் யார் பெரியவர் என்ற பதவிச் சண்டை நடந்து வருகிறது. இதனால் கர்நாடக முதல்வர் குமாரசாமி இயலாமையால் தவித்து வருகிறார்.

முதல்வர் குமார சாமியை மிரட்டும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட முதல்வர் தேவையா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தால் விவசாயிகளின் வாழ்வு ஏற்றம்பெறும். புதிய இந்தியாவை உருவாக்கும் கனவு நனவாகிறது. வளர்ச்சிக்கும்

வளர்ச்சியின்மைக்கும், நேர்மறைக்கும் எதிர்மறைக்கும், தெளிவுக்கும் குழப்பத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்கால இந்தியாவை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தெளிவு பிறக்கும் என்றார் மோடி.  இக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் சதானந்த கெளடா, அனந்த்குமார் ஹெக்டே, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply