நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யம் அருகே தேத்தாக்குடியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

என்னுடைய கனவுத்திட்டம் ஒன்று உள்ளது. நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டாக வரும் 2022-ம் ஆண்டில், நம்நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானம் தற்போது உள்ளதைவிட இரண்டு மடங்கு உயர்ந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதை நிறைவேற்ற மத்திய அரசு திட்டங்களை தீட்டிவருகிறது.

தேசம் விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆன நிலையில், இப்பகுதிக்கு வந்துள்ள முதல் பிரதமர் நான்தான் என்று இங்கே சொன்னார்கள். இந்தப் புண்ணியப் பூமியைத் தரிசிக்க வந்ததது நான் செய்த புண்ணியமாகக் கருதுகிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் திமுக, அதிமுக என்று மாறிமாறி வாக்களிக்கிறார்கள். இந்த கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டை விடுதலைபெற வைக்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். பாரதம் முழுவதும் பல மாநிலங்களில் பாஜக அரசு இருக்கிறது. அங்கெல்லாம் குறிக்கோள், மந்திரம் என்பதெல்லாம் வளர்ச்சி, வளர்ச்சி என்பது மட்டும்தான். விவசாயவளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சாலை வசதி, மருத்துவமனை என வளர்ச்சி பாதையில் அம்மாநிலங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டு மக்களே உங்கள் வீடு, கடை, மருத்துவமனை, கல்விக் கூடம் என்று எதிலாவது 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறதா? உங்களுக்கு சுத்தமான குடி நீர் கிடைக்கிறதா? சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகாலம் கழித்தும் இன்னும் சுத்தமான குடி நீர் கிடைக்கவில்லை. தரமான சாலை வசதி இல்லை.

இந்நிலையை மாற்றி மாநிலத்தை வளர்ச்சிபெற வைக்க வேண்டும். எனது வாரணாசி தொகுதியில் மீனவர்களுக்கு இ-படகுகள் வாங்கி கொடுத்துள்ளோம். சூரியசக்தி மூலம் இயங்கும் படகுகளால் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 மிச்சமாகிறது. இங்குவந்து இறங்கியதும் 5 மீனவர்களை சந்தித்தேன். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சாவின் விளிம்பில் நின்றவர்கள் அவர்கள். அவர்களை இலங்கை அரசிடம் பேசி, தூக்குதண்டனையில் இருந்து காப்பாற்றி குடும்பத்தினருடன் சேர்த்தது மத்திய அரசு.

புயல், மழை வெள்ளம் வருகிற போதெல்லாம் விவசாயிகள் மற்றும் மீனவர்கள்சொல்ல முடியாத அளவு துயரமடைகிறார்கள். அவர்களின் துயரத்தைப் போக்கிட நிரந்தரமான நடவடிக் கைகளையும், தேவையான நிவாரண நடவடிக்கை களையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முழுமையான பயிர் பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

இதற்குமுந்தைய மத்திய அரசோ எதிலும் ஊழல், எங்கும் ஊழல் என்று செயல்பட்டுவந்தது. நிலக்கரி ஊழல், 2 ஜி ஊழல், 3 ஜி ஊழல் என்று ஊழல்செய்தவர்கள் இப்போது தமிழ்நாட்டில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் இருக்கும் வரை தமிழகம் வளராது. ஊழல் உள்ள மாநிலம் வளர்ச்சிபெற முடியாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Leave a Reply